பிரகாஷ்ராஜூவுடன் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய 'கேஜிஎஃப் 2' - கேஜிஎப் 2 படப்பிடிப்பு ஆரம்பம்
'கேஜிஎஃப் 2' படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் காட்சிகள் பெங்களூருவில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கப்பட்டு வருகிறது.
கன்னடத் திரையுலகிலிருந்து 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியானது 'கேஜிஎஃப்'. இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.
வெளியான சில நாள்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த விஎஃப்எக்ஸ்(Vfx) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்றது.
இப்படத்தின் முதல் பாகம் அதிரடியான வெற்றி முத்திரையை பதித்தது. தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் கருடன் கொல்லப்பட்டதற்குப் பின்பு நடக்கும் கதையாக உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக சஞ்சய் தத் 'ஆதிரா' கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக கோலார் தங்கவயல் அருகே உள்ள சியானிடே மலைப்பகுதியில் செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக, படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்தப்பட்டது.
கர்நாடகாவில் படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து கேஜிஎஃப் 2 படக்குழுவினர் இன்று (ஆகஸ்ட் 26) மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.