அறிமுக இயக்குநர் அருண் சந்திரன், நடிகர் கெளதம் கார்த்திக்கை வைத்து 'செல்லப்பிள்ளை' என்னும் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை எஸ்எஸ்டி புரொடக்ஷன் சார்பில், ஃபைரோஸ் ஹுசேன் ஷெரீஃப் தயாரிக்கிறார். தீஷன் இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது நினைவு தினத்தை போற்றும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்து அருண் சந்திரன் கூறியதாவது, "’செல்லப்பிள்ளை' மோஷன் போஸ்டரை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி. நம் தேசத்தின் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது நினைவு தினத்தை போற்றும் விதமாக, அவருக்கான அர்ப்பணிப்பாக, எங்கள் சார்பில் ஒரு அருமையான காணொலியை உருவாக்கினோம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நம் தேசத்தின் தந்தை. அவரின் தியாகத்தையும், வீரத்தையும் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.
'தேவர் மகன்' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நேதாஜி குறித்து பேசிய, “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போருக்கு கூப்பிட்டப்போ, வீச்சறிவாளும் வேல்கம்புமா கெளம்புன பயலுக நம்ம பயலுகதேன்” எனும் வசனம் என்னை ஆழமாக பாதித்தது.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் அடிக்கல்
இந்த மோஷன் டீஸரில் நேதாஜி 1942ஆம் ஆண்டில் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் ஜப்பான், ஆங்கிலம், சிங்கப்பூர், தமிழ் மொழிகளில் அமைந்துள்ள அடிக்கல்லை காட்டியுள்ளோம். இது நம் அனைவருக்கும் பெருமை. தமிழர்களுக்கும் நேதாஜிக்கும் உள்ள அசைக்க முடியாத உறவு, அவரது தீரத்தை இப்படத்திலும் இணைக்க வைத்துள்ளது. முழுக்க முழுக்க கொண்டாட்ட திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தின் நடிகர், தொழில் நுட்பக் குழுவினரை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என்றார்.