பாலிவுட்டில் நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளக்கிய நடிகை கங்கனா ரனாவத், பிரபல இயக்குநர் கரண் ஜோஹர், வெளியிலிருந்து புதிதாய் சினிமாத்துறைக்குள் நுழைபவர்களை சகித்துக்கொள்ள இயலாதவர் என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் 2017ஆம் ஆண்டு முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து கங்கனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் ஓங்குக என பிரபல பாலிவுட் வாரிசு நடிகர்கள் கூடியிருந்த விழா மேடை ஒன்றில் கரண் தெரிவித்தார்.
கங்கனா ரனாவத், கரண் ஜோஹர் மேலும் பிரபல உரையாடல் நிகழ்ச்சியான ’காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியின் மீதான தன் விமர்சனங்களை கங்கனா முன்வைத்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் ஏற்பட்டு, வாரிசு நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டனர்.
தற்போது கங்கனா குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்துள்ள கரண் ஜோஹர், ”நாங்கள் எதிரிகள்போல் சித்தரிக்கப்படுகிறோம். ஆனால் பொதுமேடை ஒன்றில் நாங்கள் சந்தித்துக்கொண்டபோது, மகிழ்ச்சியாக பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். ஒரு இயக்குநராக கங்கனாவின் திறமையை நான் மதிக்கிறேன். தன்னை நிரூபித்து விருதுகளை அள்ளி வருகிறார் கங்கனா. சக நடிகர்கள் மற்றும் கங்கனாவுடன் இந்த விருதினை ஒரே மேடையில் பெற்றதில் நான் பெருமிதம் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கங்கனாவுடன் பணிபுரிவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”சமூகவலைதளங்களில் உலவும் கருத்துகள்பற்றி எனக்குக் கவலையில்லை. என்னுடைய திரைப்படத்திற்கு அவர் தேவைப்பட்டால் நிச்சயம் அவரை உடனே அழைத்து நடிக்கவைப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கனவுகாணத் துணியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் 'தலைவி' கங்கனா ரணாவத்தின் அர்ப்பணம்...!