மும்பை குறித்தான எனது ஒப்பீடு சரியே - கங்கனா ரணாவத் - மணாலிக்கு திரும்பிய கங்கனா
மும்பை: 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மும்பை' என தான் கூறிய ஒப்பீடு மிகச் சரியானது என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் தற்கொலை குறித்து கருத்துத் தெரிவித்து வந்த நடிகை கங்கனா ரணாவத், சமீபத்தில் மும்பை காவல் துறையினரையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கங்கனாவின் அலுவலகத்தில் பல பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, மாநகராட்சி இடித்துத் தள்ளியது.
இந்நிலையில், நடிகை கங்கனா மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தனது அலுவலக கட்டடத்தின் ஒரு பகுதி மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்டது குறித்தும்; மாநில அரசுடன் நிலவி வரும் மோதல் குறித்தும் கங்கனா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் எடுத்துரைத்தார்.
பின் கங்கனா இன்று (செப்டம்பர் 14) மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான மணாலிக்குத் திரும்பியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா, "கனத்த இதயத்தோடு மும்பையை விட்டுச் செல்கிறேன். இவ்வளவு நாட்கள் தொடர்ந்து என் மீது நடந்த தாக்குதல், அதில் நான் அச்சப்பட்டது, என்னை நோக்கி வீசப்பட்ட அவதூறுகள், என் அலுவலகம், என் வீட்டை இடிக்க நடந்த முயற்சிகள், என்னைச் சுற்றி ஆயுதத்துடன் இருந்த பாதுகாவலர்கள் இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிற எனது ஒப்பீடு மிகச் சரியானது என்றே சொல்வேன்" என ட்வீட் செய்துள்ளார்.