ஏ. எல். விஜய் இயக்கத்தில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி'யில் நடித்துவரும் பிரபல நடிகை கங்கனா ரனாவத், தன் கதாபாத்திரத்திற்காக மணாலியில் இருக்கும் தனது வீட்டை ஒரு நடனப் பள்ளியாகவே மாற்றியிருப்பது அவரது ரசிகர்களால் சிலாகித்துக் கொண்டாடப்பட்டுவருகிறது.
சிறுவயது முதலே பரத நாட்டியத்தில் தேர்ந்து விளங்கிய ஜெயலலிதாவின் கதாபாத்திற்காக, படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது முதலே பிரபல தமிழ் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரிடம் முறைப்படி பரதம் கற்கத் தொடங்கிய கங்கனா, தற்போது இந்தப் பாத்திரத்திற்காக அதிரடியாக தன் வீட்டை நடனப் பள்ளியாகவே மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக, கங்கனாவின் ரசிகர்களால் நிர்வகிக்கப்பட்டுவரும் பிரபல ’டீம் கங்கனா ரனாவத்’ என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் மேலும் ஒரு நடன ஆசிரியரிடம் முறைப்படி பரதம் கற்கும் காணொலி ஒன்று தற்போது வெளியாகி, அதிகம் பகிரப்பட்டுவருகிறது. தமிழில் தலைவி எனப் பெயரிடப்பட்டு, இந்தியில் ஜெயா என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்திற்காக நடனம் கற்கும் கங்கனாவின் அர்ப்பணிப்பை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிலாகித்துப் பகிர்ந்துவருகின்றனர்.