டெல்லி: நடிகை கங்கனா ரணாவத் 'தலைவி' படத்துக்காக உடல் எடையை 20 கிலோ கூட்டியிருப்பதாக அவரது சகோதரி ரங்கோலி சாண்டல் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வரும் 'தலைவி' படத்தில் மாறுபட்ட வேடங்களில் தோன்றவுள்ளார் நடிகை கங்கனா.
இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கங்கனாவின் லேட்டஸ்ட் போட்டோவை அவரது சகோதரி ரங்கோலி சண்டல் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
நீல நிற சேலையில் ஜெயலலிதா அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் போன்ற லுக்கில் கங்கனா மாறியிருப்பதுடன், அதற்காக தனது எடையையும் கூட்டியுள்ளார். இந்தப் புகைப்படத்தையும், இதற்கு கீழே ஒயின் கிளாஸுடனும், கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து ஸ்டைலாக ஒல்லியான தோற்றத்தில் இருக்கும் புகைப்படமும் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், 'தலைவி' படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்புக்காக 20 கிலோ உடல் எடையைக் கூட்டியுள்ளார் கங்கனா. இதற்கு அடுத்து இரண்டு மாதம் கழித்து தேஜஸ், தாக்கட் என இரு படங்களில் நடிக்கவுள்ளார். அதற்கு உடல் எடையை குறைத்து ஸ்டைல் லுக்குக்கு மாறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று குறிப்பட்டுள்ளார்.
'தலைவி' படம் குறித்த அப்படேட்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கும் வேளையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் தலைவி படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டார் கங்கனா.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் ஜூன் மாதம் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது.