சென்னை: 'இந்தியன் 2' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களுக்கு படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில், 'எத்தனையோ விபத்துகளை சந்தித்து கடந்திருந்தாலும், இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட, அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, விபத்து குறித்து கேள்விப்பட்ட பின்னர், விபத்தில் காயமுற்றவர்களை மருத்துமனைக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு முதலுதவி மற்றும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், விரைவில் அவர்கள் நலமுற்று திரும்புவார்கள் எனவும் தெரிவித்தார்.
இதேபோல் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன் நிறுவனமும், 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,' 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நேற்று (பிப்ரவரி 19) நடைபெற்ற எதிர்பாராத விபத்தில் எங்களது பணியாளர்கள் மூன்று பேரை இழந்துள்ளோம். இந்த விபத்தில் பலியான கிருஷ்ணா, சந்திரன், மது ஆகியோரின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளனர்.