நடிகர் பரத் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கி வெளிவந்த படம் காளிதாஸ். இந்த படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பரத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
உணர்ச்சிவசப்பட்ட 'காளிதாஸ்' பரத் அப்போது பரத் பேசுகையில், ”நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றி நாயகன் என்ற சொல்லை என் காதால் நான் இப்பொழுது கேட்கிறேன். திரையில் நான் அறிமுகமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. எப்போதும் நான் நல்ல படங்களிலேயே நடிக்க நினைத்திருக்கிறேன். இருப்பினும் சில தவறுகள் நடந்துள்ளன. இதுவரையில் நான் தன்னம்பிக்கையின் மூலமே வெற்றி அடைந்துள்ளேன்.
சமீபத்தில் சில நல்ல படங்களிலும் நடித்துள்ளேன் நல்ல விமர்சனத்தைப் பெற்ற கடுகு, சிம்பா போன்ற படங்கள் வர்த்தக ரீதியாக பெரிய வெற்றியை அடையவில்லை.
வெளியீட்டிற்கு முன்பே காளிதாஸ் படத்தை ஊடகத்தினர் உட்பட பலருக்கு நாங்கள் திரையிட்டுக் காட்டினோம். படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர். ஆனால் என்னை வைத்து இயக்கியதால் இந்தப் படம் ஓடுமா என இயக்குநரிடம் கேட்டுள்ளனர். இயக்குநர் இதை என்னிடம் நேரடியாக சொல்லவில்லை என்றாலும் மற்றவர்கள் மூலம் இதை தெரிந்துகொண்டேன். மனதிற்கு கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. ஆனால் சிலவற்றை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
நான் பெரிதாக படிக்கவில்லை, 16 வயதிலேயே சினிமாவிற்குள் வந்துவிட்டேன். சினிமா தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. இனியும் தொடர்ந்து சினிமாவிலேயே இருப்பேன்” என்றார்.