களவாணி-2 பட விவகாரத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக இயக்குநர் சற்குணம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அதன்படி இன்று சென்னை பெருநகர் காவல் ஆணையத்திற்கு வந்த தயாரிப்பாளர் சிங்காரவேலன், தன் மீது அளித்த புகாருக்கு நேரில் விளக்கம் அளித்தார்.
சற்குணம் கூறுவது சுத்தப் பொய் - தயாரிப்பாளர் சிங்காரவேலன் - sarkunam
சென்னை: களவானி -2 படத்தின் இயக்குநர் சற்குணம் தங்கள் மீது அளித்துள்ள குற்றச்சாட்டு பொய்யானது, அதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம் என தயாரிப்பாளர் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முன்னதாக களவாணி-2 படத்தை விமல் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அனைத்து பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் விமல், களவாணி-2 படத்தை வாங்கிக்கொள்ளுமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், அக்டோபர் 14, 2017ஆம் ஆண்டு இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டோம். அப்போது அவரிடம் 1.50 கோடி ரூபாய் பணம் கொடுத்தேன்.
ஆனால், அவர் எங்கள் பணத்தில் படத்தை ஆரம்பிக்காமல், திடீரென்று ஏப்ரல் மாதம் இயக்குநர் சற்குணமே இந்த படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து பணத்தை திரும்பித் தருமாறு கேட்டோம். ஆனால், அவர் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, களவாணி-2 படத்திற்கு தடை உத்தரவு வாங்கினோம். இதை திசைதிருப்ப எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைத்து காவல் ஆணையரிடம் இயக்குநர் சற்குணம் பொய் புகார் அளித்துள்ளார். இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்து சட்டப்படி நீதியை வெல்வோம்' என தெரிவித்தார்.