தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள்?' - மூடநம்பிக்கைகளை தகர்த்த பகுத்தறிவு பாதுகாவலன் - sivaji ganesan

தமிழ் சினிமாவின் ஸ்டீரியோடைப்பை உடைத்து ‘பராசக்தி’ என்ற காவியத்தை தந்த காவிய நாயகன் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் (ஜூன் 3) இன்று. ‘பராசக்தி’ படத்தின் மூலம் அவர் என்ன செய்தார், அந்தப் படத்தை ஏன் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் கொண்டாடுகின்றனர் என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு.

kalaignar

By

Published : Jun 3, 2019, 2:41 PM IST

Updated : Jun 3, 2019, 7:44 PM IST

1952ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் என்ற புதுமுக நடிகனை முன்னணி கதாபாத்திரமாக வைத்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படம் வெளியானது. கருணாநிதி தன் வசனம், திரைக்கதை யுக்தியை பயன்படுத்தி இந்தக் கதையை எப்படி தமிழ் சினிமாவின் திருப்புமுனையான படமாக மாற்றினார் என்பது இன்றளவும் பலருக்கும் வியப்பை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை யுக்தி

கலைஞர் உடன் சிவாஜி

திரைப்படம் தொடங்கி அரைமணி நேரம் போயிருக்கும், கதாநாயகனின் குடும்பம் சிதைந்து அவன் தங்கை வறுமையின் பிடியில் சிக்கியிருப்பாள். அதுவரை நடந்த கதையை சம்பந்தம் இல்லாத இரண்டு கதாபாத்திரங்கள் திரையில் தோன்றி சொல்லிவிட்டு போவார்கள். நல்லா வாழ்ந்த குடும்பம் இப்படி ஆகியிருச்சு என அவ்வளவு நேரம் நடந்த கதையை சொல்லிவிட்டு கடந்து செல்வார்கள். படத்துக்கு லேட்டா வரவங்க பக்கத்தில் இருப்பவர்களிடம் கதை கேட்டு நச்சரிப்பதை தவிர்க்க இப்படி ஒரு காட்சியை அமைத்திருப்பார்.

பெண்ணியவாதி கலைஞர் கருணாநிதி

கதாநாயகி அறிவுரை வழங்கும் காட்சி

‘பராசக்தி’ படத்தில் வரும் துணிச்சலான பெண் கதாபாத்திரங்கள் போல் இன்றுவரை தமிழ் சினிமாவில் வேறு கதாபாத்திரங்கள் அமைக்கப்படவில்லை என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் இன்றும் பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டிவரும் சூழலில், கதாநாயகியை பகுத்தறிவுவாதியாக காட்டியிருப்பார்.

பிராணநாதா, ஆருயிரே உள்ளிட்ட வார்த்தைகளை தாண்டி கதாநாயகனை கதாநாயகி அழைக்காத காலகட்டமது, ‘பராசக்தி’யில் கதாநாயகனை பார்த்து கதாநாயகி, 'நீ ஒரு முட்டாள்' என அழுத்தமாக சொல்லி அதற்கான காரணங்களை விளக்குவார்.

சமூகத்தால் தானும் தன் தங்கையும் வஞ்சிக்கப்பட்டதாக எண்ணிக்கொண்டு வெறுப்பில் அலையும் கதாநாயகனை பார்த்து நீ ஒரு சுயநலவாதி, உன் தங்கைக்காக மட்டும் யோசிக்கிறாய். உன் தங்கை போல் எத்தனை பெண்கள் வாழ்க்கையைத் தொலைத்து அலைகிறார்கள். அவர்களைப் பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறாயா என கேள்வி எழுப்புவார்.

'சமூகப் புரட்சி என்பது ஆலகால விருட்சத்தின் கிளைகளை வெட்டுவது அல்ல, அதன் வேர்களை பெயர்த்தெடுப்பது' என புரட்சிகர கருத்துகளை கதாநாயகனிடம் பேசுவார்.

சரி, கதாநாயகி கதாபாத்திரம்தான் இப்படி என்றால், கதாநாயகனின் தங்கை கல்யாணியை தன் இச்சைக்கு பயன்படுத்த நினைக்கும் வில்லன் கதாபாத்திரத்தின் மனைவி அசால்ட்டாக பெண்ணுரிமை பேசி கடந்து செல்வார். கதாநாயகன் தங்கையிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கும் வில்லன் தன் மனைவியிடம் சிக்கிக்கொள்கிறான்.

அப்போது அவர் வழக்கமான தமிழ் சினிமா போல், நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன், ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்யத் துணிந்தீர்கள் என கண்ணீர் வடிக்காமல், நீயெல்லாம் மனுசன்னு பிறந்துருக்க பாரு என்பார். அதற்கு வில்லன், என் இஷ்டம் நான் அப்படித்தான் செய்வேன் என்று சொல்லவும், நானும் என் இஷ்டம்னு வேற ஆம்பள கையப்பிடிச்சுட்டு போகவானு கேட்பார். நீளும் இந்த உரையாடலில், ஏம்மா கல்யாணி கதவை பூட்டிக்க, கண்ட நாயெல்லாம் உள்ள வரப் பார்க்கும் என தன் கணவனை சாடுவது போல் அந்தக் கதாபாத்திரத்தை அமைத்திருப்பார்.

அதிகாரவர்க்கத்துக்கு எதிரான கலைஞர்

அதிகாரவர்க்கத்துக்கு எதிரான பேச்சு

ரோட்டோரமாய் படுத்துக் கிடக்கும் கதாநாயகனை காவலர் ஒருவர் எழுப்பி. நீ பிக்பாக்கெட்தானே என்பார், இல்ல எம்ப்டி பாக்கெட் என கதாநாயகன் பதில் சொல்ல, அந்த உரையாடல் இவ்வாறு நீளும்

காவலர்: இங்க ஏன்டா வந்து படுத்த...

கதாநாயகன்: மாடு செய்த புண்ணியம் கூட இந்த மனுசன் செய்யலையா? மதராஸ்ல மனுசன் மிருகமாதான் இருக்கான்

காவலர்: என்னடா சொன்ன?

கதாநாயகன்: உங்களை சொல்லல, முதுகெலும்பு உடைய மூட்டை வண்டி இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்கத் தெறிக்க ரிக்ஷா வண்டியிழுத்து கூனிப் போயிருக்கிறானே, நாயைப் போல சுருண்டு நடைபாதையில் குடும்பத்தோடு தூங்குகிறானே அந்த நல்லவன், நாதியற்றவனை, நாலு கால் பிராணியாக்கப்பட்ட அந்த மனிதனைச் சொன்னேன். சென்னை புனிதமான நகரம், இங்கே மனிதன் மிருகம் என்பார்.

காவலர்: நீ சென்னைக்கு மேயரா வந்து மிருகத்தலாம் மனுசனா மாத்து..

கலைஞர் முதல்வரானார், மனிதனை சக மனிதனே இழுக்கும் 'கை' ரிக்‌ஷாவை ஒழித்தார் என்பது வரலாறு.


மூடநம்பிக்கைகளை தகர்த்த கலைஞர் கருணாநிதி

மூடநம்பிக்கைகளை தகர்த்த கலைஞர்

டேய் பூசாரி, யாரது அம்பாளா? அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள்?

கோயிலில் குழப்பம் விளைவித்தேன், கோயில் வேண்டாம் என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதற்காக உள்ளிட்ட வசனங்களால் ‘பராசக்தி’ திரைப்படத்தை மூடநம்பிக்கைக்கு எதிரான சக்தியாக மாற்றியவர் கலைஞர்.

யாசகம் பெறுபவர்கள் முதல் அத்தனை அடித்தட்டு மக்களுக்காவும் நீதி பேசியிருப்பார் கலைஞர். மாநில அரசாங்கமே தடைசெய்ய வேண்டும் என்று கூறிய ‘பராசக்தி’ திரைப்படம் 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாகியது. அதிகாரவர்க்கங்களின் கைகளில் காலகாலமாக சிக்கிக் கிடந்த தமிழ் சினிமாவை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கலைஞர்.

பராசக்திக்கு முன், பராசக்திக்கு பின் என்றுதான் தமிழ் சினிமாவை பிரித்துப் பார்க்க முடியும். பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ‘பராசக்தி’ குறித்து, PK என்று அமிர் கான் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியானது.

மதங்களில் இருக்கும் மூடநம்பிக்கைகளை சாடி எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தை வட இந்திய ஊடகங்கள் எல்லாம் ஆஹா, ஓஹோ என பாராட்டினார்கள். ஆனால் அது தமிழ்நாட்டில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், அதற்கு பல ஆண்டுகள் முன்பே ‘பராசக்தி’ அந்தக் கருத்துகளை இன்னும் தீவிரமாக நமக்கு சொல்லிவிட்டு சென்றிருக்கிறது.

பராசக்தி

‘பராசக்தி’ படத்தைப் பார்த்து அதிகாரவர்க்க கும்பலும், மூடநம்பிக்கை ஆசாமிகளும் இன்றும் நடுங்குகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம்தான், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘பராசக்தி’ புறக்கணிக்கப்பட்டது.

தமிழ்நாடு பல்வேறு விஷயங்களுக்கு முன்னுதாரணமாய் இருப்பதற்கு காரணம் திராவிட சித்தாந்தங்கள்தான், திரைப்படங்களின் மூலம் திராவிட சித்தாந்தங்களை வித்திட்டு, அந்த சிந்தனைகளை எளிய மக்களுக்குள் பெரும் அளவு கடத்திய திராவிடக் காவலன் கருணாநிதி பிறந்த தினம் இன்று. முடிந்தால் ‘பராசக்தி’ திரைப்படத்தை பார்க்காதவர்கள் பார்த்துவையுங்கள், எத்தனை முறை பார்த்தாலும், முதல்முறை பார்க்கும் அதே பிரமிப்பைத் தரக்கூடியது.

Last Updated : Jun 3, 2019, 7:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details