கோவில்பட்டி கிளைச்சிறையில் சந்தேகத்திற்கிடமாக வணிகர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தன. உயிரிழந்த வணிகர்களான பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரைக் காவல் துறையினர் அடித்துக்கொலை செய்துள்ளனர் என்றும்; காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்றும் அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இரண்டு நாட்கள் உடற்கூறாய்வுக்கு ஒப்புதல் வழங்காத உறவினர்கள் நேற்று(ஜூன் 25) ஒப்புதல் அளித்ததையடுத்து பென்னிக்ஸ், ஜெயராஜின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டன. இந்நிலையில், திரைப் பிரபலங்கள் சிலர் ட்விட்டரில் பென்னிக்ஸ், ஜெயராஜூக்கு நீதி வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத்தைக் கேட்டு பயந்தேன். அவர்கள் மீது கொடூரத்தை நிகழ்த்தியவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
அரசியல்வாதியும் நடிகையுமான குஷ்பூ சுந்தர், "பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் வழக்கில் குற்றவாளிகளுக்கு காலதாமதம் இல்லாமல் தண்டனை வழங்கப்படுமா என்று பார்க்கலாம்? குற்றவாளிகள் நீதியிலிருந்து தப்பிக்கக் கூடாது. தாங்கள் அதிகம் விரும்பியவர்களை அந்தக் குடும்பம் இழந்துள்ளது. தாமதமாக கொடுக்கப்படும் நீதி அநீதிக்குச் சமம்" இவ்வாறு ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.