த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இதில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசன், இயக்குநர் பா.இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்டப் பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்
'ஜெய் பீம்' படத்தில் காவல் துறை அலுவலராக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
'ஜெய் பீம்' படத்தின் ஒரு காட்சியில் பிரகாஷ் ராஜ் இந்தி பேசும் அடகு கடைக்காரரிடம் விசாரணை மேற்கொள்வார். அப்போது அந்த கடைக்காரர் இந்தியில் பேசுவார். அப்போது அவரின் கன்னத்தில் அறைந்து பிரகாஷ்ராஜ் தமிழில் பேசுமாறு கூறுவார். அதே போல் தெலுங்கு மொழியில் இப்படம் வெளியானநிலையில், அக்காட்சியில் தெலுங்கில் பேசுமாறு பிரகாஷ் ராஜ் கூறுவார்.
ஆனால், இந்தி டப்பிங்கில் பிரகாஷ் ராஜ், அவரை அறைந்து உண்மை பேசுமாறு கூறுவார். இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காட்சிக்கு வட இந்தியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் இருப்போர் இந்தக் காட்சிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மறைக்கப்பட்ட... மறுக்கப்பட்ட பலகதைகள் இனி வரும் - பா.இரஞ்சித் நெகிழ்ச்சியான ட்வீட்!