தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் அனைவரும் தங்களின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வெற்றியும் காண்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் நடிகர் நாகேஷ் என்றால் அது மிகையாகாது.
கதையின் நாயகர்களைக் காட்டிலும் படத்தில் தன்னைப் பற்றிப் பேச வைப்பவர் நடிகர் நாகேஷ். இவரது திரைப்படங்களைக் காணும் போது ரசிகர்களுக்கு தானாகவே ஒரு புத்துணைச்சி தோன்றும் அதுவே நாகேஷ் வெற்றி. இவரது பயணங்களை விளக்க வேண்டிய அவசியமில்லை காரணம் அது அனைவரும் அறிந்த ஒன்றே.
தமிழ் சினிமா அவ்வளவு எளிதில் யாரையும் ஏற்றுக்கொள்ளாது, அப்படி ஏற்றுக்கொண்டவர்கள் காலம் கடந்து வாழும் அளவிற்குப் புகழ் பாத்திரமாக வாழ்வர், அதில் ஒருவர்தான் நாகேஷ். தனது கடின உழைப்பால் 1000 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், தான் சினிமாவில் கால் பதித்தது முதல், சாகும்வரை அனைத்து நடிகர்களுடனும் தனது மகத்தான பங்கைக் கொடுத்து விட்டார், ஏன் இறந்த பின்னும் அவர் நடித்த படம் கோச்சடையான்.
தனக்கென்று ஒரு பாதை வகுத்து நடிப்பு என்றால் என்னவென்று பாடம் சொன்னவர் இவர், அவரது முகத்தில் இருக்கும் தழும்புகள் கல்லூரி காலங்களில் அம்மை நோயால் ஏற்பட்டவை. என் மீது அம்மை நோய்க்கு அவ்வளவு காதல் போல என்னை விடாமல் பிடித்துக்கொண்டது என அவரே சில நேரங்களில் நகைச்சுவையாகக் கூறுவாராம்.
இவர் நடித்த பல படங்களில் இவருக்கு வசனங்கள் அதிகம் இருக்கும் அவை அனைத்தும் வெற்றிகள் கண்டன. இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் இவர் நடித்த படங்களில் அளவாகத்தான் பேசுவார் அப்படங்களும் வெற்றி கண்டன. பெண்கள் பிரச்சினைகள் பற்றி நகைச்சுவையுடன் காட்டியப்படம் மகளிர் மட்டும், இப்படத்தில் சின்ன காட்சிதான் வருவார் அதில் பிணமாக நடித்து ரசிகர்கள் கைத்தட்டுகள் அனைத்தையும் தனதாக்கினார்.
தான் சென்ற இடமெல்லாம் தன்னை நாயகனாக்கி, தன்னை அனைவரிடத்திலும் இளமையாக வைத்துக்கொண்டவர் நடிகர் நாகேஷ். காலத்தால் அழிக்க முடியாத ஆகச்சிறந்த நாயகனுக்கு இன்று (செப்.27) 88ஆவது பிறந்தநாள். தற்போது இவரது நினைவுகளை சமூக வலைதலங்களில் ரசிகர்கள் பதிவு செய்து, தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலனுடன் நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்