சென்னை: 'பிகில்' திரைப்படத்தை வெளியிட தடையில்லை. படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்த மனுதாரரும், உதவி இயக்குநருமான செல்வா காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து நடிகர் விஜய் நாயகனாக நடிக்கும் 'பிகில்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ளது. இதனிடையே உதவி இயக்குநராக பணிபுரியும் செல்வா என்பவர் பிகில் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
'பிகில்' ரிலீஸுக்கு தடையில்லை - ஆனாலும் சிக்கல்!
ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில், 'பிகில்' படத்தின் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த சூழ்நிலையில், படத்தை வெளியிட தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதில், கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதையை நான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்தக் கதையை பட வாய்ப்புக்காக சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் சொல்லி இருக்கிறேன். எனவே கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இயக்குநர் அட்லி இயக்கத்தில் தற்போது வெளிவரவுள்ள 'பிகில்' திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில், பணத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இயக்குநர் அட்லி தரப்பில், பிகில் கதையை கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்ததாகவும், மனுதாரரின் கதை அக்டோபரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளதால் முகாந்திரம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கினார். அதில், 'பிகில்' திரைப்படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை. அதேநேரத்தில் மனுதாரர் செல்வா காப்புரிமை சட்டத்தின் கீழ் 'பிகில்' திரைப்படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடரவும் அனுமதி வழங்கி வழக்கை முடிந்து வைத்தார்.