சென்னை :புகழ்பெற்ற திரைப்பட நடிகர் சிவகுமார் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆலந்துறை என்னும் ஊரில் பிறந்தார்.
இவர் ஒரு தேர்ந்த ஓவியர், மேடைப்பேச்சாளர், நடிகர் எனப் பல பரிணாமமும் கொண்டவர். 'கம்ப இராமாயணம்' சொற்பொழிவுகளும் இவர் நிகழ்த்துகிறார்.
தமிழ் சினிமா மார்கண்டேயன் 1941ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி பிறந்தார். இவர் பிறந்த பத்து மாதங்களில் இவரது தந்தையை இழந்தார். இதனால் இவரது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. சிறுவயதில் பல கஷ்டங்களை சந்தித்த இவர் சென்னையில் 7 ஆண்டுகள் தங்கி ஓவியம் பயின்றார்.
கந்தன் கருணை
இதையடுத்து, 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 1967இல் வெளியான கந்தன் கருணை படம் இவருக்கு பெயரும், புகழும் பெற்று தந்தது.
தமிழ் சினிமா மார்கண்டேயன் சிவகுமார் நடிப்பில் சரஸ்வதி சபதம் (1966), கந்தன் கருணை (1967), திருமால் பெருமை (1968) மற்றும் உயர்ந்த மனிதன் (1968) போன்ற படங்களின் மூலம் அவர் மக்களிடத்தில் நன்கு அறியப்பட்டார்.
அவர் நடிப்பில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979), கே. பாலசந்தரின் சிந்து பைரவி (1985) உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979), வண்டிச்சக்கரம் (1980) ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது
2007ஆம் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது சிவகுமாருக்கு வழங்கப்பட்டது. இவரின் நடிப்பில் வெளியான அவன் அவள் அது (1980), அக்னி சாட்சி (1982) உள்ளிட்ட திரைப்படங்களுக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அளிக்கப்பட்டன.
இவர் மூன்று தலைமுறைகளில், எம்ஜி ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத் குமார், பிரபு கணேசன், கார்த்திக், மோகன், அர்ஜுன், அஜித் குமார், விஜய், விக்ரம் மற்றும் சூர்யா உள்பட பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
1974இல் லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளார். இரு மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளார்கள்.
மகள் பிருந்தா பின்னணி பாடகி. சிவகுமாரின் மூத்த மருமகள் அதாவது சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா ஆவார்.
14 ஆண்டுகளில் 100ஆவது படம்
1987இல் இது ராஜப்பாட்டை அல்ல என்கிற சுயசரிதையை வெளியிட்டார். 2001இல் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்தார். பின்னர் பெரிய திரையில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்தார்.
பிறகு சித்தி, அண்ணாமலை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். 1965இல் நடிக்க ஆரம்பித்து அடுத்த 14 ஆண்டுகளில் 100ஆவது படத்தில் நடித்தார்.
அகரம்
1979இல் தனது 100ஆவது படம் வெளியான போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் 41 வருடங்களாக சிவகுமாரும், அவருடைய குடும்பத்தினரும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு அளித்து வருகிறார். இந்த அறக்கட்டளை தான் அகரம்.
இவர், இன்று தனது 80ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க : 'அவரை நடிக்கச்சொன்னது நான்தான்' - ரஜினியின் நிஜ வாழ்வு 'தேவா' ராஜ் பகதூர் பெருமிதம்