சென்னை :தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகை என்கிற அங்கீகாரத்தை அனைத்து தரப்பிடமிருந்தும் குறுகிய காலத்தில் பெற்றுவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தன்னுடைய 29ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இவர் நடிகை மேனகாவுக்கும் மலையாள இயக்குநர்-தயாரிப்பாளர் சுரேஷ் குமாருக்கும் மகளாகப் பிறந்தார். தன் தந்தை தயாரித்த சில மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ’கீதாஞ்சலி’ என்ற மலையாள படத்தில் தான் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு இரட்டை வேடம்.
இதையடுத்து ரவி இயக்கத்தில் வெளியான ’ரிங் மாஸ்டர்’ என்ற படத்தில் பார்வையற்றவராக நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். இந்நிலையில், 2015இல் ’இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷுடன் ’தொடரி’ படத்தில் நடித்தார். இதையடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’ரஜினி முருகன்’, ’ரெமோ’ படத்தில் நடித்தார்.
இந்த இரண்டு படங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. 2017 பொங்கலுக்கு வெளியான 'பைரவா' படத்தில் விஜய்யின் இணையாக நடித்தார் .