சென்னை: தோலி சஜே கி ரஹ்னா என்ற இந்தி படத்தில் 1998ஆம் ஆண்டு ஜோதிகா திரைத் துறையில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்தது. இதையடுத்து,1999இல் அஜித் நடித்த வாலி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து, சூர்யாவுடன் 'பூவெல்லாம் கேட்டுப்பார்’ இவருக்குத் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதன் தொடர்ச்சியாக, ’குஷி’, ’முகவரி’, ‘டும் டும் டும்’, ’சிநேகிதியே’, ‘தெனாலி’, ‘காக்க காக்க’, ‘திருமலை’, ‘மன்மதன்’, ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாகி ஜோதிகாவை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கியது.
2005இல் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'சந்திரமுகி' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்ட பெண்ணாக, நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாட்டியக்காரி சந்திரமுகியாக தன்னை கற்பனை செய்துகொண்டு சந்திரமுகியாகவே வாழும் சிக்கலும் சவாலும் நிரம்பிய கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாகப் பொருந்தினார் ஜோதிகா.
சந்திரமுகி
'ராரா' பாடலில் அவர் பரதம் ஆடியது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. படத்தில் 'கங்கா சந்திரமுகியா மாறினா' என்று ஜோதிகாவின் கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு வசனம் இடம்பெறும். ஜோதிகா சந்திரமுகியாகவே மாறியிருந்தார் என்று சொல்லும் அளவுக்கு கதாபாத்திரமாக முழுமையாக உருமாற்றம் அடைந்திருந்தார். அந்தப் படம் மிகப் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. ஜோதிகாவுக்கும் திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
தொடர்ந்து சிலம்பரசனுடன் 'சரவணன்', கமல் ஹாசனுடன் 'வேட்டையாடு விளையாடு', சூர்யாவுடன் 'சில்லுன்னு ஒரு காதல்' என வெற்றிப் படங்கள் அமைந்தன.
மொழி
ராதா மோகன் இயக்கத்தில் 'மொழி' திரைப்படத்தில் பேசும் திறனற்றப் பெண்ணாக அதே நேரம் அது குறித்த பரிதாபத்தை எதிர்பார்க்காத தன்னம்பிக்கையும் மிக்க பெண்ணாக நடித்திருந்தார்.
சூர்யாவைக் காதலித்த ஜோதிகா 2007இல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் திருமணமான ஆடவரைக் கவர்ந்து மோசடி செய்யும் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்திருந்தார். பிறகு 2015இல் வெளியான '36 வயதினிலே' திரைப்படத்தில் ஜோதிகாவின் மறுவருகை நிகழ்ந்தது.
மகளிர் மட்டும்
சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடித்து 2017இல் வெளியான படம் ’மகளிர் மட்டும்’. பிரம்மா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜோதிகாவுடன் சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுபிரியா போன்றோர் உடன் நடித்திருந்தனர். பெண்களை மையமாக வைத்து இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' திரைப்படத்தில் துணிச்சலும் தீரமும் மிக்க காவல் துறை அலுவலராக நடிப்பில் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்தார். மணி ரத்னம் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். 'காற்றின் மொழி', 'ஜாக்பாட்', 'தம்பி', 'பொன்மகள் வந்தாள்' என ஜோதிகாவின் நடிப்புப் பயணம் வெற்றிகரமாகத் தொடர்கிறது.
உடன்பிறப்பே
சமீபத்தில் வெளியான 'உடன்பிறப்பே' மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பாசமலர், கிழக்குச் சீமையிலே பாணியில் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையிலான உறவை தங்கையின் கணவர் பிரிப்பதால் வரும் துயரத்தைச் சொல்லும் ஒரு திரைப்படம்தான் இந்த 'உடன்பிறப்பே'.
இவர் மூன்று முறை தமிழ்நாடு அரசு விருது, கலைமாமணி விருது பெற்றுள்ளார். திரை வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தில் தொடர்ந்து கவனிக்கத்தக்கக் கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் அவர் திரை வாழ்வில் இன்னும் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துகள்.
கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்த ஜோதிகா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் திரையுலகினரும் தங்களது வாழ்த்தைக் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க : ஓய் செல்ஃபிக்கு இன்று பிறந்தநாள்!