கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடிகர் சோனு சூட் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இதுதவிர பலருக்கு மருத்துவ உதவி, ஏழை குடும்பத்துக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது என்று பல சேவைகளை செய்தார்.
அதுமட்டுமில்லாது மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், காவலர்களுக்கு முகக்கவசங்கள், வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்தது என தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்துள்ளார்.
இந்நிலையில் சோனு சூட்டின் மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, ஜ.நா.மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேரு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் தள்ளிவைக்கப்பட்ட படப்பிடிப்புகள் மீண்டு தொடங்கியுள்ளது. சோனு சூட்டும் தான் நடிக்க ஒப்பக்கொண்ட படங்களின் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் சோனு சூட்டை விஷால் சந்தித்து பேசினார். அப்போது அவருடன் எடுக்கொண்ட புகைப்படத்தை விஷால் சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பு குறித்து விஷால், எனது அன்புச் சகோதரர், அற்புதமான ஆன்மா சோனு சூட்டைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மனித இனத்திற்கு கடவுள் தந்த பரிசு. நீங்கள் செய்திருக்கும் தொடர்ந்து செய்துவரும் சமூகப் பணிகள் மூலம் எனக்கு ஊக்கம் அளித்துள்ளீர்கள். பரிச்சயம் இல்லாதவர்களின் குடும்பங்களுக்காக பலரும் இம்மாதிரியான முயற்சிகளை செய்ய மாட்டார்கள். நீங்கள் செய்த அத்தனை பணிகளையும் பற்றி கேள்விப்பட்டு வாயடைத்துப் போய்விட்டேன். தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுங்கள் என பதிவிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய அனுபவம் குறித்து தற்போது சோனு சூட் புத்தகம் எழுதியுள்ளார்.