‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் மெலிந்த தேகத்துடன் வந்த தனுஷ் என்பவரை கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள பலர் தயாராக இல்லை. தமிழ் சினிமாகதாநாயகர்களுக்கு என்று தனி பிம்பம் இருந்தது. அழகான உடலமைப்பு கொண்டவர்கள்தான் பெரும்பாலும் கதாநாயகர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பிம்பத்தை உடைத்த வெகுசில கதாநாயகர்களில், தனுஷ் முக்கிய இடம் வகிக்கிறார். அவரின் இரண்டாவது திடைப்படம் ‘காதல் கொண்டேன்’, வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு, அவரை சிறந்த நடிகர் என்றும் ஏற்றுக்கொள்ள வைத்தது. எனினும் இந்த இரண்டு திரைப்படங்களும் இளைஞர்களை மட்டுமே கவரும் வண்ணம் அமைந்திருந்தது, ஃபேமிலி ஆடியன்ஸை கவரவில்லை. அதன்பிறகு வந்த ‘திருடா திருடி’ திரைப்படத்தின் மூலமாக ஃபேமிலி ஆடியன்ஸின் கவனத்தை ஈர்த்தார். முதல் மூன்று திரைப்படங்களும் ஹிட்டானதால், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.
சைக்கோ வினோத்
‘துள்ளுவதோ இளமை’ படத்துடன் காணாமல் போவார் என்று பலரும் நினைத்த தனுஷ், ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் சைக்கோவாக நடித்து இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நாயகனாக மாறினார். மிகவும் அமைதியான, கூச்ச சுபாவம் உள்ளவராக தோன்றி பின்னர் சைக்கோவாக மாறும் காட்சிகளில் வித்தியாசம் காட்டியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ‘தொட்டு தொட்டு போகும் தென்றல்’ பாட்டுக்கு சிறப்பாக நடனமாடியிருப்பார். இதில் பேஸ்கட் பால் க்ரவுண்டில் நடைபெறும் சண்டைக் காட்சி, ப்ரூஸ் லீ ஸ்டைலில் அமைக்கப்பட்டிருக்கும். ‘காதல் கொண்டேன்’ படத்துக்குப் பிறகு தமிழகத்தில் தனுஷுக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. இதற்கு அடுத்து வந்த படத்துக்கு ‘தமிழக ப்ரூஸ் லீ’ தனுஷ் என ரசிகர்கள் பேனர் அடிக்கும் அளவுக்கு அந்த சண்டைக் காட்சியில் தத்ரூபமாக நடித்திருப்பார்.
இந்த படத்துக்குப் பிறகு வெளியான ‘திருடா திருடி’ (2003), ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது. அந்த வருடத்தில் வெளியாகிவெற்றி பெற்ற டாப் 10 திரைப்படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. கடுமையான காய்ச்சலை பொருட்படுத்தாமல் தனுஷ் இந்தப் பாடலுக்கு ஆடினார் என உடன் நடித்த சாயா சிங் ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பார். இதில் தனுஷின் நடனம் வெகுவாக பாராட்டப்பட்டது.
கொக்கி குமார்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தனுஷிடம், நீங்கள் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என நினைத்த கனவு கதாபாத்திரம் எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ் சிறிதும் யோசிக்காமல், அப்படி ஒரு கனவு கதாபாத்திரத்தில் நான் ஏற்கனவே நடிச்சுட்டேன், அதான் ‘புதுப்பேட்டை’ படத்தில் வரும் ‘கொக்கி குமார்’ கதாபாத்திரம் என்று கூறினார்.
‘யாருடா இவன் பென்சில்ல கோடு போட்ட மாதிரி இருக்கான்’, வில்லன்கிட்ட இருந்து தப்பிக்க சுவற்றில் தொங்கும் தனுஷ பார்த்து வில்லன் சொல்லும் வசனம்.
இந்த உடம்ப வச்சுகிட்டு ரவுடியா நடிச்சா யார் ஏத்துக்குவான்ற கேள்வியை தன் நடிப்பின் மூலம் மாற்றினார். அன்பு கதாபாத்திரத்தை கொலை செய்யும்போது தனுஷ் பார்க்கும் பார்வை ‘கொக்கி குமார்’ கதாபாத்திரத்துக்கு அவர் சரியான தேர்வு என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கும்.
இந்தக் காட்சிக்குப் பிறகு படம் முழுவதுமா அந்த கதாபாத்திரத்தில் அசால்ட்டாக நடித்திருப்பார். கடைசியில் குழந்தையை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, நீ அப்பானு கூப்ட்டு கூட நான் கேட்கலையேடா என கூறும் காட்சியில் கண்கலங்க வைத்திருப்பார். எனினும் ‘புதுப்பேட்டை’ திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
K.P.கருப்பு
தனுஷின் திரையுலக பயணத்தை மாற்றியமைத்தது ‘ஆடுகளம்’ திரைப்படம் என நிச்சயமாகச் சொல்லலாம். கருப்பு என்ற கதாபாத்திரத்தில் மதுரையைச் சேர்ந்த இளைஞனாக தனுஷ் நடித்திருப்பார். மதுரைத் தமிழை தனுஷ் அளவுக்கு தெளிவாக மதுரை சார்ந்த படங்களில் நடித்த எந்த கதாநாயகனும் உச்சரிக்கவில்லை என்றே கூறலாம். இடைவேளைக்கு முந்தைய சேவல் பந்தயக் காட்சி நம்மை சீட்டின் நுணிக்கு கொண்டு செல்ல தனுஷின் நடிப்பும் காரணம்.
டேய் தம்பி நீ செத்துருவ நான் செத்துருவேன், ஆனா அடுத்து வர 15 நிமிசம் இன்னும் 50 வருசத்துக்கு அப்படியே இருக்கும். விட்றாத, பந்தயம் மட்டும் கொடுத்துறாதடானு சேவலோடு தனுஷ் பேசும் காட்சி சிலிர்ப்பை ஏற்படுத்தாமல் இல்லை.
இந்த திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தேசிய விருது பெற்றது தனுஷுக்கு பாலிவுட் கதவுகளைத் திறந்துவிட்டது. தனுஷ்தான் ‘ராஞ்சனா’ படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குநர் ஆனந்த் எல்.ராய் அடம்பிடித்தார். அவரது நம்பிக்கை வீணாகவில்லை, ‘ராஞ்சனா’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாலிவுட் ரசிகர்கள் தனுஷை மிகவும் ரசித்தனர்.
அதன்பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பேச்சுத் திறனற்ற இளைஞனாக நடித்து அசத்தியிருப்பார்.
’ராஞ்சனா’ படத்துக்காக சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்ற தனுஷ், நான் 25 படம் நடிச்சுருக்கேன், ஆனால் இதுதான் என்னோட அறிமுக நாயகனுக்கான விருது. நீங்க எவ்வளவு தூரம் போகலாம், எவ்வளவு வேணும்னாலும் கத்துக்கலாம், ஆனால் புதுசா கத்துக்க எதாவது இருந்துட்டே இருக்கும் என கூறியிருப்பார்.
அதேபோல் புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருந்தார். பாடகர், கவிஞர் (Poet-u), இயக்குநர் என தமிழ் சினிமாவின் பன்முகக் கலைஞனாக மாறினார். ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
மயக்கம் என்ன ‘கார்த்திக்’
சிறந்த போட்டோகிராபராகும் கனவோடு அலையும் இளைஞனாக தனுஷ் நடித்திருப்பார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. எனினும் தனுஷின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. லட்சியத்தை அடைய முடியாமல் தவிப்பது, குடிக்கு அடிமையாகி அதிலிருந்து மீள அவதிப்படுவது என படத்தின் இரு பகுதியிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தார்.