சியான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் படம் 'துருவ நட்சத்திரம்'. கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்டது. இது மட்டுமல்லாது 'துருவ நட்சத்திரம்' என்ற படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் அப்படத்தில் சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஸ், தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
அதன்பின் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருந்தது. ஆனால் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மட்டும் எஞ்சியிருந்த சமயத்தில், பொருளாதாரப் பிரச்னை காரணமாக இறுதிகட்ட பணிகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. 2018ஆம் ஆண்டே இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் விக்ரமின் ஸ்கெட்ச், கடாரம் கொண்டான் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இருப்பினும் விக்ரமின் ரசிகர்கள் 'துருவ நட்சத்திரம்' படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்றே காத்திருக்கின்றனர். இதனிடைய நீண்ட நாட்களாக ரிலீஸ் பிரச்னையை சந்தித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியிடுகிறது என்ற அறிவிப்பை கௌதம் மேனன் தனது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும் அவர் தற்போது பப்பி பட நடிகர் வருணை வைத்து இயக்கிவரும் ’ஜோஷ்வா’ என்ற படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று அறிவித்தார்.
கௌதம் மேனன் இந்த இரண்டு அறிவிப்போடு விட்டுவிடாமல் விக்ரமின் ரசிகர்களுக்கும் ஒரு இனிப்பு செய்தியை அறிவித்துள்ளார். அவரின் மற்றொரு ட்விட்டர் பதிவில் துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அடுத்த 60 நாட்கள் நடைபெறும் என்றும், படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். இதனால் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகவுள்ளதால், அவரது ரசிகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
நடிகர் விக்ரமின் மகனான துருவ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதித்ய வர்மா' படம் இம்மாதம் வெளியாகிறது. கூடிய விரைவில் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படமும் வெளியாகவுள்ளது கோலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.