கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு பிப்ரவரி மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே ஏப்ரல் மாதத்தில்
நெஞ்சோடு பூச்செடி வைக்கும் நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பன்னிரெண்டும் நட்பிருக்கும் ...
நா. முத்துக்குமார் (படம்: ஏப்ரல் மாதத்தில்)
எந்தவித ரத்த சம்பந்தமமுமின்றி நம் இறுதி நாட்கள் வரை உடன் பயணிக்கும் நண்பர்களை, நட்பை கொண்டாட இப்படி ஒரு தினம் தேவைப்படதான் செய்கிறது. சமூக வலைதளங்களில் முஸ்தபா முஸ்தபா முதல் மீசைக்கார நண்பா என இணையவாசிகள் நண்பர்கள் தினத்தை சிறப்பிக்கத் தொடங்கிவிட்டனர். தமிழ் சினிமாவில் நட்புக்கு மையப்படுத்தி எடுக்கப்பட்ட சில படங்களைப் பற்றிய தொகுப்பு இதோ,
கர்ணன் - துரியோதனன்
இது ஒரு இதிகாச காலத்து நட்பு, நட்புக்கு உதாரணம் என்றாலே கர்ணன் - துரியோதனன் என சொல்லும் அளவுக்கு இவர்கள் நட்பு காலம் கடந்தும் நிற்கிறது.
பலபேர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும் கர்ணனை, துரியோதனன் அரவணைத்துக் கொள்கிறான். அதனால் மட்டும் இந்த நட்பு கொண்டாடப்படவில்லை, அதையும் தாண்டி கர்ணன் மீது துரியோதனனுக்கு இருந்த நம்பிக்கையால் தான் இது காலம் கடந்து நிற்கும் நட்பானது.
துரியோதனன் மனைவி பானுமதியுடன் கர்ணன் தாயம் ஆடிக்கொண்டிருக்கிறான். பாதி ஆட்டத்தில் எழுந்து செல்லும் பானுமதியின் மடியில் கட்டியிருக்கும் முத்து மாலையை விளையாட்டு ஆர்வத்தில் கர்ணன், எங்கே ஓடுகிறாய் என இழுத்துவிடுகிறான். அப்போது அங்கு வரும் துரியோதனன், சிரித்தபடி உங்கள் விளையாட்டு தொடரட்டும் என்கிறான்.
கர்ணனனும் பானுமதியும் விலகி நிற்கின்றனர். விளையாட்டு ஆர்வத்தில் செய்வதறியாது மடியை இழுத்துவிட்டேன் என துரியோதனனிடம் உடல் நடுங்கி நிற்கிறான் கர்ணன். தங்கையின் மடியை இழுத்ததற்கு அண்ணன் ஏன் உடல் நடுங்கி நிற்க வேண்டும், உன்னையும், என் மனைவியையும் நன்கு அறியாதவனா நான் என துரியோதனன் கூறுவான். என் உயிரே என கர்ணன், துரியோதனனை கட்டியணைத்துக் கொள்வது போல் இந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
தளபதி
மஹாபாரதத்தின் தழுவல் என கூறப்படும் இந்த படமும் நட்பினை பறைசாற்றும் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. மம்மூட்டி (தேவா), ரஜினி (சூர்யா) இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். சூர்யா பக்கம் நியாயம் இருப்பதாகக் கூறி, கொலை வழக்கு ஒன்றில் இருந்து அவனைக் காப்பாற்றி தேவா நண்பனாகிறான்.
இவர்களின் நட்புக்கான முதல் புள்ளியில், உனக்கு கொடுக்க என்னிடம் உயிர் மட்டும்தான் இருக்கு என தேவாவிடம் சூர்யா சொல்லுவார். அந்த வசனத்துக்கு ஏற்ப படத்தின் இறுதிவரை சூர்யாவின் கதாபாத்திரம் பயணிக்கும். நட்புனா என்னனு தெரியுமா, உனக்கு கொடுக்கதான்டா இந்த உயிர், அது ஏன் உனக்கு புரியமாட்டிங்குது என ரஜினி பேசும் காட்சி இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாதது.
சூர்யாவால் மக்களிடம் நன்மதிப்பை பெரும் தேவா, என்னோடு வந்துவிடு என சூர்யாவுக்கு அழைப்பு விடுவான். அதற்கு சூர்யா, எனக்கு இங்க நிறைய பந்தம் இருக்கு, என்ன சாக்கடையில் இருந்து தூக்கி வளர்த்துருக்காங்க, நான் பசியில அலைஞ்சப்ப சோறு போட்ருக்காங்க என்பார்.
தேவா: நான் கூப்டா வரமாட்ட..
சூர்யா: இவ்வளவு பேர் இருக்காங்க தேவா
தேவா: உனக்கு இவ்வளவு பேர் இருக்காங்க, எனக்கு நீ மட்டும்தான்டா இருக்க,
இந்தக் காட்சியும் பெரிதும் ரசிக்கப்பட்டது.
கண்ணெதிரே தோன்றினாள்
ஈஸ்வரா வானும் மண்ணும் பிரெண்ட்ஷிப் பண்ணுது உன்னாலீஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும் பிரெண்ட்ஷிப் ஆனது உன்னாலீஸ்வரா - நட்பு சார்ந்து எழுதப்பட்ட பாடல்களில், வைரமுத்து எழுதிய இந்தப் பாடலும் நல்ல ஹிட் அடித்தது.