தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலியல் உறவு: இதுவரை சொல்லாத கதை - ஒற்றைச் சிந்தனையின் 2 படங்கள்! - கிஸ்லோஸ்கி திரைப்படங்கள்

இருவேறுத் திரைப்படங்களில் உள்ள ஒற்றைச் சிந்தனையை அல்லது ஒற்றைச் சிந்தனையின் அணுகுமுறைகளைப் பற்றிக் கூறுவதே ’குறுக்கேற்று’. ஆங்கிலத்தில் ‘Cross over', இரு வேறு வகையான இசையை ஒன்று சேர்ப்பது, இரு வேறு வகையான கலையை ஒன்றுசேர்த்து அணுகுவது என்று குறுக்கேற்றத்தின் பயன்பாடுகள் பல... அதில் இரு வேறு திரைப்படங்களில் அணுகப்பட்டிருக்கும் ஒற்றைச் சிந்தனையைக் கீழே காண்போம்.

திரைக்குறுக்கேற்று : Badlapur x Three colours:white
திரைக்குறுக்கேற்று : Badlapur x Three colours:white

By

Published : Dec 18, 2021, 9:56 AM IST

மனித நாகரிகத்தில் குடும்ப வாழ்க்கை எப்போது ஆரம்பித்திருக்கும்? என்று யோசித்துப் பார்க்கையில், ஒரு வேடிக்கையான பதில் தோன்றியது. ஒரு வேலை ஒரு பெண்கூட மட்டும்தான் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததின் விளைவாகக்கூட இருக்கலாம்.

ஆமாம், இங்கு ’காமம்’ என்பது ஒரு உறவு, உணர்ச்சி, தேவை. இவை அனைத்தையும் தாண்டி அது ஒரு அதிகாரத்தின் அடையாளம். ஒரு ஆண் தன் மனைவியிடம் தன்னை ஆணாக நிலைநிறுத்துவதற்கு அதிகாரப்பொருளாக ’காமம்’ தான் முக்கியப் பங்காகப் பார்க்கப்படுகிறது. அது ஒரு ஆணின் கர்வமாக இந்தச் சமூகக் கட்டமைப்பு அமைத்துவைத்திருக்கிறது.

தற்போது நாம் பார்க்க இருக்கும் இரண்டு திரைப்படங்களும் பழிவாங்கும் படலத்தைப் பற்றிய கதைகள்தாம். இவ்விறு கதைகளிலும் பழிவாங்கும் செயலின் இலக்கைப் பற்றியும், அதன் உளவியல் கட்டமைப்பைப் பற்றியும், பாலியல் உறவுகள் பற்றியும் மிகவும் நுணுக்கமாக இதுவரை சொல்லாத பாணியில் எடுத்தியம்பியிருக்கும்.

பட்லாபூர் (Badlapur)

ஹிந்தியில் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2015இல் வெளியான படம்தான் பட்லாபூர். இது ஒரு பழிவாங்கும் படலம் பற்றிய கதை. இந்திய சினிமாவில் நீர்த்துப்போன ஒரு கதைக்களம். ஆனால் இது பழிவாங்கும் கதைகளிலே வித்தியாச அணுகுமுறையாக இருக்கும்.

உண்மையில் பழிவாங்கும் செயலின் இறுதி இலக்கு எதை அடைவதாக இருக்கும்? பழி வாங்குதலில் உள்ள உளவியல், நியாயங்கள், கோட்பாடுகள் என அனைத்தையும் வேறு பார்வையில் பார்க்கவைத்திருக்கும் இப்படம்.

ஒரு கட்டத்தில் படத்தின் வில்லன்களைவிட கதையின் நாயகன் மீதுதான் நமக்கு பயம் வரும். அவ்வாறு கதாபாத்திர வடிவமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் வெளியான மிகச்சிறந்த பழிவாங்கும் கதை கொண்ட திரைப்படமாக இதை நிச்சயம் கூறலாம்.

இந்தத் திரைப்படத்தின் சிந்தனையில், கொரியாவில் வெளியான ‘I saw the devil' திரைப்படத்தின் தாக்கம் இருப்பதையும், அது நம்மை நினைவூட்டுவதையும் தவிர்க்க முடியாது.

ஒரு பழிவாங்கும் கதைக்கு இதைவிட சிறந்த திரைக்கதையை நிச்சயம் எழுத முடியாது. எழுத்தில் அவ்வளவு நேர்த்தி. பொதுவாகப் பழிவாங்கும் கதை கொண்ட திரைப்படங்கள்போல் இதில் வேக வேகமாகக் காட்சிகள் நகராது. எதிர்பார்க்கும் எந்தப் பரபரப்பும், திருப்பங்களும் இருக்காது.

அதைத் தாண்டி, நிதர்சனமாகப் பழிவாங்கும் எண்ணத்தின் தாக்கம், திரைப்படம் முடிந்த பின்னும் நம்மிடம் நீடிக்கும். இதில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

குறிப்பாக, கதையின் நாயகனாக நடித்த வருண் தவான் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலக்கதை இத்தாலிய எழுத்தாளர் மஸிமோ கர்லெட்டோ எழுதிய ’Death's Dark abyss' என்ற புதினத்தைத் தழுவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

த்ரீ கலர்ஸ்:ஒய்ட் (Three colors:White)

இந்தத் திரைப்படம் கீஸ்லோஸ்கி இயக்கத்தில் ‘Three colors - Triology' என்கிற திரைத் தொகுப்பின்கீழ் 1994ஆம் ஆண்டு வெளியானது. இந்தத் திரைப்படம் ஆரம்பத்தில் ஒரு காதல் கதையாகத் தொடங்கி, அதன்பின் வெவ்வேறு தளங்களில் பயணித்து கடைசியில் பழிவாங்கும் கதையாக முடியும்.

இன்னும் சொல்லப்போனால் படத்தின் கடைசி கட்டத்தில்தான் இது ஒரு முழுமையான பழிவாங்கும் கதையாக மாறும். இது, ஆண்மைக் குறைபாடு உள்ள ஒரு ஆணின் கதை. பாலியல் உறவு முறைகள், அதில் உடையும் ஆணின் கர்வம், அதில் ஆணுக்கு நேரும் அவமானம் என அனைத்தையும் மிக எளிய முறையில் இயக்குநர் கையாண்டிருப்பார்.

இது, இறுதியாகப் பழிவாங்கும் கதையாக முடியப்போவதை நிச்சயம் நம்மால் கணித்திருக்க முடியாது. இந்தத் திரைப்படத்திலும், பழிவாங்குதலின் இலக்கை வித்தியாசமாக அணுகியதில் இது தனித்து நிற்கிறது.

மிக அழுத்தமாக பாலியல் உறவுமுறைகளைக் கையாண்ட ‘A short film about love' போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் கீஸ்லோஸ்கியின் படம் சற்று சுமாரானதுதான். என்றாலும், இதில் பழிவாங்குதலையும், ஆணின் பாலியல் அதிகாரக் கட்டமைப்பையும் வித்தியாசமாகக் கையாண்டதற்காக நிச்சயம் பாராட்டலாம்.

குறுக்கேற்றுக் கூறுகள்

இந்த இரண்டு திரைப்படங்களிலும், பழிவாங்குதலின் இலக்கைக் கையாண்டவிதம் மிக வித்தியாசமாக இருக்கும். கிட்டத்தட்ட ஒற்றைச் சிந்தனை என்றும் கூறலாம். பழிவாங்கும் கதையுள்ள திரைப்படங்களுக்கு வரையறுத்த பல இலக்கணங்களை இந்த இரு திரைப்படங்களும் உடைத்திருக்கும்.

மிக முக்கியக் குறுக்கேற்றுக் கூறாக இந்தத் திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளைக் கூறலாம். த்ரீ கலர்ஸ்:ஒய்ட் திரைப்படத்தில் ஆண்மைக்குறைவுள்ள தன் கணவனை மனைவி பழிவாங்கும் செயலிலும், பட்லாபூர் திரைப்படத்தின் ஒரு கட்டத்தில், தன் மனைவியைக் கொன்றவனைப் பழிவாங்க கதையின் நாயகன் செய்யும் செயலிலும் பாலியல் சான்றே ஒத்திருக்கும்.

ஒரு ஆணின் உளவியல் கட்டமைப்பு, பாலியல் கர்வத்தை உடைப்பதின் மூலம் மட்டுமே அது ஒரு இனிமையான சுகமான உறவாக இருக்கும்.

இதையும் படிங்க:நடிகர் விக்ரமிற்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details