சென்னை: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து திரை துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட தயாரிப்பு சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தற்போது கரோனா தொற்று காரணமாக திரைத்துறை ஐசியூவில் உள்ளதாகவும், தமிழ்நாடு அரசு தங்களுக்கு உதவவேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தனர். இது தொடர்பாக பேசிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பு சங்கத் தலைவர் முரளி,
ஐசியூவில் தயாரிப்பாளர்கள் சங்கம்
"திரை துறையினருக்கு இன்றும் (ஜூன் 9) நாளையும் (ஜூன் 10) தடுப்பூசி முகாம் நடத்தப்படும். இதில், சுமார் 250 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா தொற்றை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசுடன் திரை துறையும் உறுதுணையாக இருக்கும் என இந்த முகாம் மூலம் தெரிவித்துள்ளோம். தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு 10 லட்ச ரூபாய் நிதி உதவி அளித்து உள்ளோம்.
கேளிக்கை வரிவிலக்கு
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக புதிய திரைப்படங்கள் வெளியாகாமல் திரைத்துறை முடங்கியிருக்கும் சூழ்நிலையில், தொற்று பாதிப்புக்கு ஏற்ப விரைவில் திரையரங்குகளை திறக்க வேண்டும். பாதிப்பு கட்டுக்குள் வந்ததும் புதிய திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். கேளிக்கை வரியிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறோம். இது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வுப் பாடலை வெளியிட்ட வேல்முருகன்