தமிழில் ரஜினிகாந்த் எப்படியோ அது போலத்தான், தெலுங்கில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்கிறார் சிரஞ்சீவி. ரஜினிக்கு இருக்கும் மாஸ், க்ளாஸ் போன்று தெலுங்கிலும் தனது வெரைட்டியான நடிப்பால் சிறுவர் முதல் பெரியவர்வரை கவர்ந்தவர் சிரஞ்சீவி.
அங்கு, நான் பிறப்பால் சிரஞ்சீவி ரசிகன் என்று கூறுவதை வாழ்நாள் கெளரவமாக கூறுபவர்களும் ஏராளம். இதையடுத்து நடிப்பின் உச்சத்தில் இருந்தபோதே அரசியல் கட்சி தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் அரசியலிருந்து விலகி, சுமார் ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பின் தமிழில் சூப்பர் ஹிட்டான 'கத்தி' ரீமேக்காக உருவான 'கைதி நம்பர்: 150' படம் மூலம் கம்பேக் கொடுத்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் கொடுக்க வரலாற்றுப் படத்தை கையிலெடுத்தார்.
ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியின் சுதந்திரப் போராட்ட தியாகியாக திகழ்ந்த உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையை தேர்ந்தெடுத்தார். இந்தப் படத்துக்கு 'சைரா நரசிம்ம ரெட்டி' என்று பெயர் வைக்கப்பட்டது.
பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படம் இன்று தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.
சைரா நரசிம்ம ரெட்டி படம் குறித்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பிலிருந்த சிரஞ்சீவியின் ரசிகர்கள், தற்போது ரிலீசை கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.
பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சிரஞ்சீவி கட்அவுட் இந்த நிலையில், ஹைதரபாத்திலுள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் சிரஞ்சீவியின் பிரமாண்ட கட்அவுட் முழுவதும் மாலையால் அலங்கரித்து ரசிகர்கள் பிரமிக்கவைத்துள்ளனர். விடுமுறை நாளான இன்று சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிரம்பிவழிகின்றன.