நடிகர் ரஜினிகாந்த் வரும் 12ஆம் தேதி தனது 70ஆம் பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இதையொட்டி, ஏற்கனவே கடந்த 2ஆம் தேதி நட்சத்திரப்படி தனது இல்லத்தில் பூஜை செய்து வழிபாடு செய்தார்.
இந்த நிலையில், ரஜினியின் ரசிகர்கள் அவர் மென்மேலும் பல படங்களில் நடிக்கவும், உடல்நலத்தோடு வாழவும் வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். 70 நாட்கள் தொடர்ந்து ரஜினி பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய ரசிகர்கள் ரஜினி நலமுடன் வாழவேண்டி அர்ச்சனை செய்தனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு, உணவு, இனிப்புகள், ரஜினி படங்கள், பரிசுப்பொருட்களை வழங்கினர்.