செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சலங்கை துரை இயக்கத்தில் நடிகை கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் 'இ.பி.கோ 302'. இதில் 'துர்கா ஐ.பி.எஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடிகை கஸ்தூரி நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. பின்னர் ஈடிவி பாரத் செய்திகளுக்காக நடிகை கஸ்தூரி பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
பொன்பரப்பியில் நடந்த சம்பவம் குறித்து?
பொன்பரப்பியில் நடந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே. இதுல முக்கியமா நான் பார்க்கிறது... தேர்தல் சமயத்தில் முக்கியமான சமூகத்தினர் இருவர் இருக்கக்கூடிய இடங்கள்ல காவல்துறை கொஞ்சம் அதிக அளவில் முன்னேற்பாடாக இருந்திருக்கணும். இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் இனிமேல் தடுக்கப்படணும்.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி...?
ஸ்ரீலங்காவில் நடந்துவரும் தொடர் குண்டுவெடிப்புகள் ஒரு மதவாத பயங்கரமாதான் இதை எல்லாருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிர்ச்சிகரமான செய்தி. நானேகூட என்னுடைய சமூக வலைதளங்களிலும் இந்த விவாதத்தை ஆரம்பித்தேன். 'உனக்கு என்ன தெரியும் தேவை இல்லாமல் வாதத்தை உண்டு பண்ணாதே, மத்திய அரசின் கைக்கூலியா?' என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் தானே முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஒரு குற்றத்தை... குற்றவாளியே வந்து ஒப்புக் கொள்கிறவரை நாம் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போக்கு பயங்கரவாதத்தைவிட ஒரு பயங்கரமான விஷயமாக நான் பார்க்கிறேன்.
இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்தும் படுகொலை சம்பவங்களுக்கு இஸ்லாமிய சொந்தங்கள் கண்டிப்பாக தங்களுடைய கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். ஒரே மதம் என்பதால் மிருகங்களையெல்லாம் மனிதர்களாக ஒப்புக்கொள்வது பயங்கரவாதத்தைவிடக் கொடிய ஒரு விஷயம்.
டிக் டாக் செயலி சமூகத்திற்கு சீர்கேடா?
டிக் டாக் சமூக சீர்கேடு என்று சொன்னால் செல்ஃபோன் அதைவிட சீர்கேடு. நடிக்கிற பெண்கள் அதைவிட சீர்கேடு. டிக் டாக் என்பது ஒரு அறிவியல் சாதனம். அது ஒரு சமூக வலைதளம் அல்லது சமூக பகிர்தல் தளம். கத்தியை வைத்து காய்கறிகளை வெட்ட முடியும், அழகான ஒரு மரச் சிற்பம் செதுக்க முடியும், கொலை செய்யவும் முடியும். கத்தியை வைத்து கொலைதான் செய்ய முடியும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். டிக் டாக் செயலியை தடை செய்வது என்பது ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான ஒரு பிற்போக்குத்தனமான ஒரு சிந்தனை என்று அவர் தெரிவித்தார்.