நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம், ‘வந்தா ராஜாவாதான் வருவான்’. அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் ஒரு வருடமாக, ஒரு திரைப்படம்கூட வெளியாகவில்லை. இதையடுத்து சிம்பு தனது 45ஆவது திரைப்படமான 'மாநாடு' படத்தில் நடித்து வந்தார். ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு படப்பிடிப்பு நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்தவுடன் சிம்புவின் 46ஆவது படத்தை, இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வருவதாக அறிவிக்கப்பட்டது. மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வரும் இப்படம், திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின், பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் இன்று (அக். 26) விஜயதசமியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. 'ஈஸ்வரன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்காக, சிம்பு தனது உடலை வெகுவாக குறைத்துள்ளார். ஸ்டைலாக பாம்பை கழுதில் வைத்திருக்கும் சிம்புவின் 'ஈஸ்வரன்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.