மலையாளத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். மோகன்லாலுடன் மீனா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். அப்போது, இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டணி 'த்ரிஷ்யம் 2' படத்திலும் இணைந்தது.
கரோனா அச்சம் காரணமாக, திரையரங்கு வெளியீட்டை தவிர்த்து ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் த்ரிஷ்யம் 2, பிப்ரவரி 19ஆம் தேதி வெளியானது. மலையாளத்தில் மெகா ஸ்டார் நடிகரின் படம் நேரடியாக டிஜிட்டல் தளமான ஓடிடியில் வெளியானது என்ற பெருமையை த்ரிஷ்யம் 2 பெற்றது.
முதல் பாகத்தின் முடிவிலிருந்து இரண்டாம் பாகத்தை இயக்குநர் தொடங்கினார். இதனால், த்ரிஷ்யம் 2 படம் சமூகவலைதளங்களில் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. சமூகவலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் படத்தின் கதை, திரைக்கதை குறித்து சிலிர்ப்புடன் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்தைப் போன்று, இரண்டாம் பாகம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில், முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இதையும் ஜீத்து ஜோசப்பே ரீமேக் செய்கிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. தெலுங்கில் இப்டத்தினை ராணா டகுபதியின் தந்தையான சுரேஷ் டகுபதி தனது தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரெக்டக்ஷன் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 15) தொடங்கியது.
இதையும் படிங்க:கொஞ்சம் பார்த்துச் செய்யுங்க...வேண்டுகோள் விடுத்த வெங்கட் பிரபு!