நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
கடந்த மூன்று நாள்களாக அவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுனர் விசாரணை நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து இன்று (செப்.09) வீடியோ கான்பரன்ஸ் முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடிகை ரியா சக்ரபோர்த்தி சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அவருக்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், சுஷாந்த் சிங்கிற்காக அவர் போதை மருந்துகளை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மூன்று நாட்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது போலீஸ் காவலை நீட்டிக்க விரும்பவில்லை என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இதையடுத்து அவரை 14 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரிவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து மும்பையிலுள்ள பைகுல்லா பெண்கள் சிறப்பு சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.