தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எப்படி இருக்கும் சுஜாதா இல்லாத 'முதல்வன் 2' - ரசிகர்களைக் கவருமா?

ஷங்கர் இயக்கத்தில் உருவான 'முதல்வன்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அந்தப் படத்தில் முக்கிய பங்காற்றிய சுஜாதா இல்லாத ’முதல்வன் 2’ திரைப்படம் உருவானால் எப்படி இருக்கும், ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன என்பது பற்றிய சிறு தொகுப்பு இதோ...

sujatha

By

Published : Nov 9, 2019, 3:42 PM IST

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'முதல்வன்'. ஷங்கர், எழுத்தாளர் சுஜாதா கூட்டணியில் இந்தியன் படத்துக்குப் பிறகு உருவான இரண்டாவது திரைப்படம் இது. இதில் ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 1999 நவம்பர் 7ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது.

'லஞ்சம்' என்பதை மையப்புள்ளியாக வைத்து சுதந்திரப் போராட்டம், வர்மக்கலை என 'இந்தியன்' படத்தை விரிவாகக் காட்டியது போல், அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து 'சாமானியன் ஒருவன் ஒருநாள் முதல்வன்'ஆகும் கான்செப்ட்டை கையிலெடுத்திருந்தது ஷங்கர் - சுஜாதா கூட்டணி. இந்தத் திரைப்படம் ரஜினி, விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பலரைக் கடந்து அர்ஜுன் கைகளில் வந்து சேர்ந்தது காலத்தின் கட்டாயம். அர்ஜுனும் தனக்கு அமைந்த நல்ல வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு, தான் இந்தப் படத்துக்கு சரியான தேர்வு என்பதை நிரூபித்திருப்பார்.

'இந்தியன் 2' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஷங்கர், 'முதல்வன் 2' எடுப்பார் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. 'முதல்வன்' திரைப்படம் வெற்றிபெற்றதற்கு தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் பெரிதும் உதவியாக இருந்தாலும், அதில் பெரும் பங்கு வகிப்பது சுஜாதாவின் வசனங்கள்.

Mudhalvan

'நான் உட்கார்ந்திருக்க இந்த நாற்காலியோட 4 கால் என்னோடது இல்ல. ஒரு கால் கூட்டணி கட்சிக்காரனோடது. இன்னொரு கால் சாதிக்காரனோடது. மூனாவது கால் நம்ம ஆட்சி நடத்த பணம் கொடுக்குற பணக்காரனோடது. நாலாவது கால் நம்ம தொண்டர்களோடது... இதுல ஒரு கால் போனாலும் நாம மண்ணக் கவ்வ வேண்டியதுதான்' இப்படி நிகழ்கால அரசியல் சூழலுக்கு ஏற்றபடி வசனங்களை எழுதியிருப்பார்.

'நான் 30 ஆண்டுகள் அரசியல்ல பழம் தின்னு கொட்டை போட்டவன்' என வில்லன் ரகுவரன் சொல்லும்போது, 'உன்னோட பழகுன ஒரு வருசத்தையும் சேர்த்து, நான் 31 வருச அரசியல்வாதி' என சொல்வது.. வில்லனை பழிவாங்கிய பின்பு, 'கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே' என அர்ஜுன் பேசும் வசனங்கள் அந்தக் காட்சிக்கு வலு சேர்த்ததோடு, இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.

'மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு' என லஞ்சம் வாங்கும் அதிகாரியை இந்தியன் படத்தில் கொலை செய்யும் கமல் எழுதிக்கொடுக்கும் வசனம் பார்வையாளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

Indian shooting spot

சுஜாதா இல்லாத 'இந்தியன் 2' எப்படி வரப்போகிறது என்பதை பார்த்து விட்டு 'முதல்வன் 2' பற்றி யோசித்துக் கொள்ளலாம் என சுஜாதா ரசிகர்கள் கூறுகிறார்கள். சுஜாதா இல்லாததன் தாக்கம் ஷங்கர் படங்களில் அப்பட்டமாகவே தெரிகிறது. அவர் மறைவுக்குப் பின், ஷங்கர் எடுத்த திரைப்படங்களில் சில வெற்றி பெற்றிருந்தாலும், காலம் கடந்து சிலாகிக்கும் அளவுக்கு அது அமையவில்லை என்பது கசப்பான உண்மை.

சுஜாதா மறைவுக்குப் பிறகு ஜெயமோகன், மதன் கார்க்கி, சுபா (சுரேஷ், பாலகிருஷ்ணன்) என சிலருடன் ஷங்கர் பணிபுரிந்திருக்கிறார். தற்போது 'இந்தியன் 2' படத்தில் எழுத்தாளர் லக்‌ஷ்மி சரவணக்குமார், கபிலன் வைரமுத்து ஆகியோர் ஜெயமோகனுடன் இணைந்துள்ளனர். எனவே 'இந்தியன் - 2' படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:

அயோத்தி தீர்ப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details