மக்களவைத்தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள பழம்பெரும் கட்சிகள் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொகுதிப் பங்கீடு முடிந்துள்ள நிலையில், பிரசாரக்கூட்டங்களின் மூலம் மக்களின் வாக்குகளைப் பெற கடுமையாக உழைத்து வருகின்றனர். இதனோடு நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியைத்தொடங்கி தேர்தலில் தனித்துப் போட்டியிட இருப்பதால் கமல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் அஜித்தை அரசியலுக்கு வரவேண்டும் என கடிதம் எழுதி ட்விட்டரில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதிய கடிதத்தில், "நாற்பது ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி, உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவிகிதம் சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு... உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்"என எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.