தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா இன்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சீனு ராமசாமி, இளையராஜாவிற்கு பிறந்தநாள் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "இசைக்கு
ஒரு வாழ்த்துப்பா. எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப்
பாணனே மேற்குத்தொடர்ச்சி
மலையிலே மிதந்து வந்த மேகமே.
உமது வருகையை
எதிர்பார்த்து
இசையின் வாசல்
காத்திருந்தது
கருப்பு வெள்ளை
அன்னக்கிளியாள்
பாட்டிசைக்க
எங்கள் இதயத்தில்
வண்ணக்கிளிகள் பறந்தன
அன்று பெய்யத் தொடங்கிய மழை இசையின் சிரபுஞ்சியானது
தவிலின் நாவுகளைப்
பேச வைத்தாய்
தமிழிசைக்கே அது
முதுகெலும்பானது
உமது மூச்சு
புல்லாங்குழலுக்கு சுவாசம்
உமது வயலின்கள்
சலனப்படமென
எங்கள் சாலைகளை
உயிர்ப்புறச் செய்தது
உமது சங்கீதம் எங்கள்
நினைவுத் தடத்தில்
பூத்த பூ
காலத்தின் பிம்பம்
கடிகாரத்தின்
பென்டுல சப்தம்
தூக்கத்திற்கு முன்
எம்மைத் தீண்டும்
அமைதித் தென்றல்
நீர் ஆர்மோனியத்தில்
விரல் வைத்தீர்
எங்கள் செங்காட்டு பூமியில்
பெயர் தெரியாச்
செடி ஒன்று
பூ பூத்தது
இசைஞானியே
வெண்பா இயற்றிய
தமிழ் ஞானியே
நீர் சுற்றியதால்
கிரிவலம்
இசைத்தட்டானது" என்று குறிப்பிட்டுள்ளார். சீனு ராமசாமியின் கவிதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.