சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் எனப் பெயர் பெற்ற ஷங்கர் தனது 58ஆவது பிறந்தநாளை நேற்று (ஆக.17) கொண்டாடினார். திரைப்பட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சினிமா என்பது விழித்துக்கொண்டே காணும் கனவு. ரசிகர்களுக்காக பிரம்மாண்டமான கனவுகளை திரையில் தந்த இயக்குநர் ஷங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
1993ஆம் ஆண்டு வெளியான 'ஜென்டில் மேன்' திரைப்படம் மூலம் பெரும் கவனத்தைப் பெற்ற இயக்குநர் ஷங்கர், காதலன், ஜீன்ஸ், பாய்ஸ் என அடுத்தடுத்து இளைஞர்களைக் கவரும் விதமான படங்கள் மூலம் தனித்து அடையாளம் காணப்பட்டார். இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி ஆகிய திரைப்படங்கள் அரசியல் ரீதியான விமர்சனத்தைப் பெற்றாலும், வெகுமக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.
முன்னணி நடிகர் ரஜினியை வைத்து அவர் இயக்கிய எந்திரன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால், சமீபத்தில் அவர் இயக்கிய ஐ, எந்திரன் 2.0 போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தன. ஷங்கர், கமல் ஹாசனை வைத்து தற்போது ’இந்தியன் 2’ திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இருள் அரசன் ஒடியனின் திகில் சம்பவங்கள்... மிரட்ட வரும் 'கருவு'