ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து நவரசங்களை மையமாக வைத்து 'நவரசா' என்னும் ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் நவரசா
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை மணிரத்னம், ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கரோனா பொது முடக்கம் காரணமாகத் திரையுலகில் ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கு உதவும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது.
கோபம், சிரிப்பு, வெறுப்பு உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 9 குறும்படங்களில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், யோகிபாபு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இன்மை பய உணர்வு
இதில் சித்தார்த்தை வைத்து 'இன்மை' என்னும் குறும்படத்தை இயக்கிய இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் படம் குறித்து கூறுகையில், “'நவரசா' ஆந்தாலஜி திரைப்படத்தில் பய உணர்வை வெளிப்படுத்தும் கதையில் நான் பணியாற்றியுள்ளேன்.
பயம் மட்டுமே அனைத்து உயிரனங்களுக்கும் பொதுவான பண்பு. நீருக்கடியில் வாழும் உயிரினம் உள்பட, உலகின் அனைத்து உயிரினத்திற்கும் பயம் என்பது அடிப்படை உணர்வு. இந்த உணர்வை திரையில் காட்ட வழக்க்கமான ஹாரர் அல்லது திரில்லர் கதை கண்டிப்பாக வேண்டாம் என முடிவு செய்தோம்.
வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை சொல்லும் இன்மை
எதிர்பாரா நிகழ்வினால் உருவாகும் சோகமும் அதன் விளைவாக உருவாகும் பயத்தையும் கதையில் கொண்டு வந்தோம். நடிகர் சித்தார்த்துடன் இக்கதை குறித்து விவாதித்த பொழுது எனக்கும் சித்தார்த்துக்கும் எதிர்பாரா நிகழ்வுகள், ஷேக்ஸ்பியர் ஆகியவற்றின் மீது பொது விருப்பம் இருந்ததை அறிந்தோம்.
எனது விருப்பமானது King Lear அல்லது Hamlet போன்ற கதையை எழுத வேண்டும் Othello அல்லது Macbeth போன்ற படைப்பை உருவாக்க வேண்டும் என்பது தான். இறுதியில், வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை சொல்லும் கதையைச் சொல்ல முடிவு செய்தோம். இது இன்மை பகுதியில் அழகாக வந்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: 'இன்மை உங்களை ஆச்சர்யப்படுத்தும்' - நடிகர் சித்தார்த்