நம் நினைவின் அடுக்குகளிலிருந்து தொலைந்த அல்லது நாம் தொலைத்த வாழ்வியலையும், உறவுகளையும் மீண்டும் நம்மைத் தேட வைக்கும் படைப்பாளி, யதார்த்தமான படைப்பாளி. அப்படி தமிழ் சினிமா மறக்க முடியாத, மறக்கக் கூடாத படைப்பாளி சேரன்.
கோலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குநர்களில் சேரன் முக்கியமானவர். இவரது திரைப்படங்களை ஒருவர் ரசிக்க, உணரப் பெரிதாக மெனக்கட வேண்டியதில்லை. மனிதத்துடன் இருக்கும் சராசரி சாமானியனாக இருந்தால் போதும். ஏனெனில் சேரனின் திரைமொழி அலங்காரமற்றது. நம்மில் நிகழும் நிகழ்வுகளையும், நம்முடன் உலாவும் மனிதர்களையும் அவர்களது குணாதிசயங்களையும் காட்சிப்படுத்துபவர்.
அவரது திரைப்படங்கள் எப்போதும் ஒருவித மென்மையை நிகழ்த்தும், யதார்த்தத்தை நம்முள் செலுத்தும். இந்த உலகம் மாற்றுத்திறனாளிகளை ஒன்று ஒதுக்கி வைக்கும். இல்லை கருணையோடு பார்க்கும். இது இரண்டுமே மிகவும் ஆபத்தானது. மாற்றுத்திறனாளிகளின் வலியையும், வேதனையையும் 'பொற்காலம்' திரைப்படம் மூலம் சேரன் வெளிக்கொண்டு வந்தார்.
எப்போதும் நமது அருகில் இருப்பவர்களை நாம் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம். 'பொற்காலம்' திரைப்படத்தில் தனது தங்கைக்கு முரளி ஊரெல்லாம் மாப்பிள்ளை தேட, அருகிலேயே இருக்கும் வடிவேலுவை அவர் கண்டுகொள்ளவே மாட்டார்.
அப்போது, ' ஏம்பா உன் தங்கச்சியை வெச்சு வாழ வக்கத்தவன்னு என்னைய எதுமே கேக்கலயா. உன் வீட்டுல மண்ணு மிதிக்க மட்டும்தான் இவன் லாயக்குனு நினைச்சியா. உன் மனசுல இருக்க ஊனத்த மாத்திக்கப்பா' என்று வடிவேலு பேசும் ஒரு காட்சியின் மூலம், உடலில் இருப்பது மட்டும் ஊனமில்லை, நமது அருகிலேயே இருப்பவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் மனமும் ஊனம் தான் என்பதை சொல்லியிருப்பார் சேரன்.
அதுமட்டுமின்றி, மாற்றுத் திறனாளியான தனது தங்கை அனுபவித்த வலி போல், வேறு ஒரு மாற்றுத் திறனாளி பெண் அனுபவிக்கக்கூடாது என்பதால், தனது காதலை ஒதுக்கிவைத்துவிட்டு மாற்றுத்திறனாளி பெண்ணை முரளி திருமணம் செய்துகொள்வார். மேலும் அந்தத் திருமணத்திற்கு தான் காதலித்த பெண்ணே தாலி எடுத்துக்கொடுப்பது போல் சேரன் காட்சியமைத்திருப்பார். அதுவரை தமிழ் சினிமாவில் அப்படி ஒரு க்ளைமேக்ஸ் காட்சி வந்திருக்கிறதா என்பது சந்தேகம்.
வெளிநாட்டு மோகம் 90களில் தழைத்தோங்கி இருந்தது. இப்போதும் அந்த மோகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இப்போதைய மோகம் சிறிது விழிப்புணர்வுடன் இருக்கிறது. யாரென தெரியாதவர்களிடம் வெளிநாடு செல்ல பணம் கொடுப்பது உள்ளிட்ட செயல்கள் 90களில் உச்சத்தில் இருந்தன.
தங்களிடம் இருக்கும் நிலத்தில் சிறிது சிறிதாக உழைத்து சேமித்தது, வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்தது என தங்களது வாழ்க்கையின் உழைப்பை பணமாக மாற்றி ஏஜெண்டிடம் கொடுத்து ஏமாந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். குறிப்பாக தென் தமிழ்நாட்டில். அவர்களின் வலியையும், வேதனையையும் யதார்த்தம் குழையாமல், 'வெற்றிக்கொடிகட்டு' படம் மூலம் பேசியிருப்பார் சேரன்.
குறிப்பாக சார்லி முரளியின் வீட்டுக்கு வரும்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடந்துகொள்வது, அதன் பிறகு பார்த்திபனிடம் தனது குடும்பத்தின் நிலை குறித்து சார்லி வேதனையுடன் சொல்வது, மனைவியின் பிரசவத்தின் போது அருகில் இருக்க முடியாத பார்த்திபன் என அந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம்மைச் சுற்றி இருக்கும் ஏமாற்றம் அடைந்தவர்களின் வலியை சொல்லிக்கொண்டே இருக்கும்.
கூட்டுக் குடும்பம்தான் ஒருவருக்கொருவர் அனுசரிப்பை சொல்லிக்கொடுக்கும், அன்பைப் பரிமாற சொல்லிக்கொடுக்கும். அந்த கூட்டுக்குடும்பம் சிதையும்போது ஒரு தலைமுறை தொலைகிறது என்று பொருள். அந்த தொலைந்த தலைமுறையின் வாழ்க்கையை வைத்து 'பாண்டவர் பூமியை' படைத்தார், சேரன்.
குடும்ப பகையால், அந்தப் பகையுடன் வரும் காதலால், அந்தக் காதல் மூலம் நிகழும் கொலையால், ஒரு குடும்பம் சொந்தக் கிராமத்தை விட்டு வேறு எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கும். உலகிலேயே மிகவும் ரணமான விஷயம் என்னவென்றால், தனது சொந்த ஊரைவிட்டு ஒரு குடும்பம் இடம்பெயர்வது.
இப்போது, பண்டிகைகளுக்குச் சொந்த ஊருக்கு செல்வதற்கே யோசிக்கும் தலைமுறையாக இருக்கிறோம். ஆனால், பாண்டவர் பூமியில் தனது அடுத்த தலைமுறை, சொந்தக் கிராமத்தில்தான் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கோ சென்ற ஓர் குடும்பம் மீண்டும் தங்களது பூமிக்கே திரும்பி வந்து, வீடு கட்டும்படி அந்தத் திரைப்படத்தை கொண்டு சென்றிருப்பார், சேரன்.
தற்போது நவீனம் என்ற பெயரில் பழமையையும், நினைவுகளையும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். பழைமையை கொலை செய்யாத நவீனம் அழகு. அப்படிப்பட்ட நவீன பொறியாளன் கிடைப்பது பேரழகு. பழமையைக் கொலை செய்யாமல், நவீனத்தை ஒதுக்காமல் ஒரு பொறியாளன் பாண்டவர் பூமியில் இருந்தான். கோலிவுட் பூமிக்கு இதுவரை அப்படிப்பட்ட பொறியாளன் கிடைக்கவில்லை.