கேரள கவிஞர் 'ஓ.என்.வி' நினைவாக ஆண்டுதோறும் கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் 'ஓ.என்.வி விருது' இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முதன்முதலாக கேரளாவைச் சாராத ஒரு நபருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட 18 பெண்கள் பாலியல் அத்துமீறல் புகார் அளித்துள்ள நிலையில், அவருக்கு இந்த விருது வழங்கக் கூடாது என நடிகை பார்வதி உள்ளிட்டப் பலரும் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி விருது கொடுப்பது குறித்து மறு ஆய்வு செய்வதாக ஓ.என்.வி பண்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா வைரமுத்துவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " கேரளச் சகோதரர்களின் பேரன்பினால் மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ஓ.என்.வி எங்கள் கவிப்பேரரசுக்கு அறிவித்ததை அறிந்து மகிழ்வுற்றேன். ஆனால், அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதைக் கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை.
சமீபகாலமாக எம் இனத்தின் மீதும்; மொழி மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி எங்கிருந்தோ தனிமனித மாண்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நபர்களைக் கொண்டு மதம், இனம், மொழியாகப் பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட இயலாத போரினை தொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே; உன்னை அசைத்துப் பார்த்து விடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதுணையாக இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் எறியட்டும். அவர்களின் தாகம் தீரட்டும். குளம் என்பது கானல் நீர், நீ சமுத்திரம்" என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.