சென்னை: அன்புவின் எழுச்சி தொடரும் என எண்ட் கார்டு போட்ட 'வட சென்னை' படம் வெளியாகி சரியாக ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.
1985ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு இடையிலான சுமார் 15 ஆண்டுகள், காலகாட்டத்தில் நடக்கும் கதை என்று கூறுவதைக் காட்டிலும், பல்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல்கள், வாழ்க்கை முறையே 'வட சென்னை' என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
நேர்வழியில் கதை சொல்லாமல் நான் லீனியர் எனப்படும் பல்வேறு கதைகளுக்கும் சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துரைக்கும் விதமாக தெளிவான திரைக்கதை, அதற்கேற்ற பின்னணி இசைதான் படத்தை சீட் நுனியில் ஒவ்வொருவரையும் பார்க்க வைத்தது.
ஒரு படம் என்பது சோகம், சந்தோஷம், பழைய நினைவுகள், பொழுதுபோக்கு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பார்வையாளனுக்குத் தரும். ஆனால், இந்தப் படமோ பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் கதைகளத்துக்கு உள்ளே இழுத்து, ஒரு கதாபாத்திரமாக யோசிக்க வைத்த மேஜிக்கை நிகழ்த்தியது.
படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் ஒரு பின்னணியுடன், ஒரு கருத்தை முன்வைத்து, அதனால் ஏற்படும் விளைவுகளை தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.