இந்தியாவில் கோவிட்-19 அதிகம் பரவாததற்கு காரணம் குறித்து நடிகை பிரணிதா கூறிய கருத்து தற்போது சமூகவலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரசால் உலகளவில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகப் பரவிய இதன் தாக்கம் கடந்த 10 நாட்களாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் நாடுகளின் அரசுகளும் தங்களது மக்களுக்கு விழிப்புணர்வைகளை ஏற்படுத்தி வருகின்றன. மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு அதிகளவில் இல்லை.
இதற்கிடையில், இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் ஏன் அதிகமாக பரவவில்லை என்பது குறித்து, நடிகை பிரணிதா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து தற்போது சமூகவலைதளத்தில் சர்ச்சைiய ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிரணிதா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்துக்கள் மற்றவர்களுடன் கைகொடுக்காமல் கையை கும்பிட்டு வணக்கம் சொன்ன போது பலர் சிரித்தார்கள். வீட்டுக்குள் நுழையும் முன்னர் கை கால்களை கழுவி விட்டு சென்றதை பார்த்து சிரித்தார்கள். மரங்கள், காடுகள், விலங்குகளை வணங்குவதை பார்த்து சிரித்தார்கள். சைவ உணவை இந்துக்கள் சாப்பிடுவதைப் பார்த்து சிரித்தார்கள். யோகா செய்வதை பார்த்து சிரித்தார்கள். இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் குளிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கும் இந்துக்களைப் பார்த்து சிரித்தார்கள். ஆனால் இப்போது யாரும் சிரிக்கவில்லை. ஏனெனில் இவைதான் கோவிட்-19 வைரஸை பரவாமல் தடுக்கும் காரணங்கள் ஆகும் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது சமூகவலைதளத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.