தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத், தயாரிப்பாளர் சுபாஷ் கரன், சுனில் ஷெட்டி, கதாசிரியர் கலைஞானம் நடிகர் அருண்விஜய், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதில் ராகவா லாரன்ஸ் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கிடைத்தவுடன் ஸ்டாலின் அழுதார். அதைப் பார்த்தவுடன் ஸ்டாலின் முதல்வரானால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எடப்பாடி மக்களுக்கு உடனுக்குடன் உதவுகிறார். அதனால் அவர் மீது நல்ல மரியாதை ஏற்பட்டது.
அரசியலில் நாகரிகமே இல்லாமல் சிலர் பேசுகின்றனர். நாகரிகம் இல்லாமல் பேசும் குறிப்பட்ட ஒருவரால் நாட்டிற்கே கேடு. 'நான் ஆட்சிக்கு வரும் முன் நீங்கள் சாக வேண்டும்’ என்கிறார். என் தலைவனை அவர் தவறாகப் பேசினால் நான் திரும்பப் பேசுவேன். சிறு வயதில் கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன், இருவரும் இப்போது இணைந்திருப்பதைப் பார்க்கும்போது ஏதோ மாற்றம் ஏற்படப்போகிறது என்று தோன்றுகிறது.
கடவுள் காரண காரியத்தோடுதான் அனைவரையும் படைப்பார். ரஜினி படைப்பிற்கும் ஒரு காரணம் உண்டு. அவர் சினிமாவில் கிடைத்த குரு. இதுவரை யாரையும் அவர் திட்டியதில்லை. யாருக்கும் துரோகம் செய்ததில்லை. ரஜினி ஒரு வார்த்தை பேசினாலே அது செய்திதான். அவருக்கு அரசியல் தெரியாது என்கிறார்கள் வந்த பின்தான் தெரியும். வயது அதிகம் என்கிறார்கள் அவர் நடக்கும் போது தெரியும். முன்னரே ஏன் வரவில்லை என்கிறார்கள். அப்போது அவருக்கு விருப்பமில்லை.
இந்த வயதில் அவருக்கு பணம், புகழ் தேவையில்லை. மோடியே நேரில் வந்து அவரை பார்க்கிறார். பப்ளிசிட்டியின் பெயரே சூப்பர் ஸ்டார்தான். மக்களுக்கு உழைக்க வருகிறார். தன் குடும்பத்தை இங்கு இரண்டாவது வரசையில் அமர்த்தியுள்ளார். நாங்கள் முதல் வரிசையில் அமர்ந்துள்ளோம். தர்பார் பாட்ஷா வை வெல்லுமென்று எதிர்பார்க்கிறேன். முதல் போஸ்டரை பார்த்தபோது தலைவருக்கு வயது 70 அல்ல 25 என்று தோன்றியது’ என்றார்.