சென்னை: வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இத்திரைப்படத்தில் அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர். இதனை க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி, ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதன்படி அக்டோபர் 24ஆம் தேதி ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை, ஓடிடி, சாட்டிலைட், விநியோக உரிமை உள்ளிட்டவைகளை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வைத்த செக்
திடீரென ஜெயில் படம் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியானதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட், ஓடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொள்வதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகையால் படத்தை வெளியிடத் தடை விதிக்கக்கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று (டிச.3) விசாரித்த நீதிபதிகள், ஜெயில் திரைப்பட ஓடிடி உரிமை குறித்து வருகின்ற 6ஆம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாதென கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ்க்கு உத்தரவிட்டனர். மேலும் திரையரங்க விநியோக உரிமை குறித்து வருகின்ற திங்கள்கிழமை முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'மகான்' டப்பிங் பணிகள் நிறைவு; பொங்கலுக்கு ரிலீஸ்?