சென்னை: நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பதை வழக்கத்துக்கு கொண்டுவரும் நேரம் இது என்று கூறி நடிகர் கமல்ஹாசன் கரோனா தொற்றிலிருந்த தற்காத்துக்கொள்வது தொடர்பாகக் காணொலி வெளியிட்டுள்ளார்.
கரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாக இரண்டு காணொலிகளை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், அரசு அறிவித்துள்ள நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு சின்ன இடைவெளியைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள காணொலியில் அவர் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பு நான்காவது, ஐந்தாவது வாரங்களில் பன்மடங்கு அதிகமாவதைப் பல நாடுகளில் பார்க்கிறோம். வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறோம் எனத் தெரியாத சிலர் பொது இடங்களில் உலாவருவார்கள். பாதிப்படைந்தது ஐந்து பேர் என்றால் அவர்கள் மூலம் 25 பேருக்கும் பரவுகிறது. அது மேலும் 100 பேர் வரை பரவாமல் தடுக்க வேண்டுமென்றால் சோசியல் டிஸ்டன்சிங் எனப்படும் விலகி இருத்தலைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதிகபட்ச விழிப்புணர்வு தேவைப்படும் நான்காவது வாரத்தில் தற்போது தமிழ்நாடு உள்ளது. எனவே கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்திடுங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் கரோனா தொற்று பரவாமலும், உங்களிடமிருந்து நெருக்கமானவர்களுக்குப் பரவாமலும் தவிர்க்கலாம்.
கரோனா தொற்று இருந்தாலே உயிருக்கு ஆபத்து என்றில்லை. ஆனால் சிலருக்கு அவர்கள் உடல்நிலையைப் பொறுத்து ஆபத்தாக மாறலாம்.