கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர்வெளியீட்டு விழாவில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசியபோது, "நயன்தாரா அனைத்து கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். நயன்தாரா, சீதை வேடமும் போட்டுள்ளார். பேய் வேடமும் போட்டுள்ளார்.முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறுமாதிரியாக இருக்கிறது.இப்போது எல்லாம் பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் சாமி வேடத்தில் நடிக்கலாம். பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்" என்றார்.
ராதாரவியின் பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் பேசிய வீடியோவையும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் ராதாரவியின் பேச்சுக்கு பல்வேறு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் ட்விட்டரில் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன்
ராதாரவியின் பேச்சு குறித்து நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவரிடம், அருவருப்பான கருத்துகளை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். யார் இவர் மீதுநடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதுகவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார். இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால் அவருடைய கீழ்தரமான கருத்திற்கு, அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து ஆரவாரம் செய்ததுதான், வேதனையின் உச்சமாக உள்ளது.
இவர் மீது நடிகர் சங்கமோ, வேறு எதாவது சங்கமோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. இப்படத்தை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றுதான் நான் நினைத்தேன். இப்போது நடந்தது சற்றும் பொருத்தமில்லாத நிகழ்ச்சியாகும். தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளனர். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என்றுகண்டனத்தை பதிவு செய்துள்ளார்.