தேசிய ஊரடங்கு காலத்தில் சமூக வலைதளத்தில் பல சேலஞ்ச் ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில் தலைகீழாக நின்று டி- ஷார்ட் அணிதல், பில்லோ சேலஞ்ச் (தலையணை மட்டும் வைத்து உடையாக அணிதல்) உள்ளிட்ட பல சேலஞ்ச், பிரபலங்கள் முதல் நெட்டிசன்கள் வரை கலக்கி கொண்டிருந்தது.
இதையடுத்து, தற்போது வீட்டு வேலைகளை செய்து பெண்களுக்கு உதவும் #BetheREALMEN என்ற சேலஞ்ச் வேகமாக பரவிவருகிறது. இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட 'பாகுபலி' இயக்குநர் ராஜமெளலி தன்னுடைய வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
மேலும், இந்த சேலஞ்சை ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் ஆகியோர் செய்யுமாறு ட்விட்டர் பக்கத்தில் அவர்களுக்கு டேக் செய்திருந்தார்.
இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட ஜூனியர் என்.டி.ஆர், இன்று அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தெலுங்கு சினிமாவின் சீனியர்களான சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ் உள்ளிட்டோருக்கு பரிந்துரைத்தார்.
ஜூனியார் என்.டி.ஆரின் சேலஞ்சை ஏற்றிருப்பதாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது தனது ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், ராம்சரண் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு வீட்டுவேலைகளை செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராம் சரண் இந்த சேலஞ்சை ரன்வீர் சிங், ராணாவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
திரை பிரபலங்களின் இந்த சேலஞ்சால் சமூக வலைதளத்தில் நெட்டிசன்களும் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.