நாம் வாழும் சம காலத்தில் மிகப்பெரும் அரசியல் தலைவராக திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இவரது மரணம் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. மேலும், அவரது நெருங்கிய தோழியான சசிகலா சிறையில் இருந்து வருகிறார்.
'சசி லலிதா' பெயரில் உருவாகும் ஜெயலலிதா, சசிகலாவின் வாழ்க்கை!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவின் வாழ்க்கை வரலாறு 'சசி லலிதா' என்ற பெயரில் படமாகிறது.
திரை உலகில் பல்வேறு இயக்குநர்கள் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அந்த வகையில், 'ஐயர்ன்லேடி' என்ற பெயரில் நித்யா மேனன் நடிக்க இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கி வருகிறார். இயக்குநர் கௌதம் மேனன் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிப்பில் 'தலைவி' என்ற பெயரில் டெலி சீரியலாக இயக்கி வருகிறார். இதேபோன்று இயக்குநர் ஏ.எல்.விஜய் 'தலைவி' என்ற பெயரில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக அறிவித்து அதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டார். இந்நிலையில், இந்த பட்டியலில் 'சசி லலிதா' என்ற பெயரும் இடம்பிடித்துள்ளது. ஜெயம் மூவீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கே.ஜகதீஸ்வர ரெட்டி இயக்குகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சசிகலா, ஜெயலலிதா முகங்கள் இணைத்து ஒரே முகமாக காட்சியளிக்கும் அந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.