தெலுங்கு மெகா ஸ்டார் சீரஞ்சீவி தனது 152 படமான 'ஆச்சார்யா'வில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். ராம் சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து சிரஞ்சீவி, மோகன்லாலின் 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்ஃபாதர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சிரஞ்சீவியின் 153ஆவது படமாகும். இயக்குநர் மோகன் ராஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தையும் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரணின் கோணிடெலா நிறுவனம் தயாரிக்கிறது. இதனுடன் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.