அசுரன் திரைப்படத்தைப் பார்த்த பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளநிலையில் அரசியல் பிரபலங்களும் திரைத்துறை பிரபலங்களும் படத்தைப் பார்த்து படக்குழுவினரை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர். ஏற்கனவே இப்படத்தைப் பார்த்து கமல்ஹாசன், பா.ரஞ்சித், திமுக தலைவர் ஸ்டாலின், மகேஷ் பாபு உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
தற்போது இப்படத்தைப் பார்த்த பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் பாராட்டியுள்ளார். இது குறித்து கரண் ஜோஹர் தனது ட்விட்டரில், என்ன அருமையான படம் அசுரன். படம் நம்மை கடுமையாக பாதிக்கிறது. சரியான பாதையில் செல்கிறது. வெற்றிமாறனின் இயக்கம், கதை சென்ன விதம் மிக அற்புதம். தனுஷின் நடிப்பு ஆச்சரியத்திற்கு அப்பாற்பட்டது. புயலுக்கு முன் அவரது அமைதி ஒப்பிட முடியாதது. தயவு செய்து அசுரன் படத்தைப் பாருங்கள். சினிமாவின் வெற்றி என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிங்க: அசுரன் பல நாவல்களைப் படமாக்கும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது-காவல் துணை ஆணையர் பெருமிதம்!