தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தங்களின் வழக்கமான ட்ரெண்டிங் ஹாஸ்டேக்குகளால் ஆக்கிரமித்தனர். அவர்கள் #BigilTrailerDay என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.
இந்த சூழலில் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பிகில் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய போஸ்டரில் விஜய் இரண்டு தோற்றங்களில் காட்சியளிக்கிறார். இந்த புதிய போஸ்டரால் விஜய் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.
இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது தொடங்கி போஸ்டர் வெளியீடு, இசை வெளியீடு என ஒவ்வொரு அப்டேட்களையும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்தனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் என்னும் பாடலும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
இதனால் ஒவ்வொரு நாளும் விஜய் ரசிகர்கள் ‘பிகில்’ குறித்து செய்திகளைப் பரப்பிவந்தனர். மேலும் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து அப்டேட் வேண்டுமென்று படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்திக்கு ரசிகர்கள் ட்விட்டரில் கோரிக்கையும் வைத்தனர். அதைத்தொடர்ந்து இன்று(அக்.12) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.