பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒருவாரம் நிறைவடைந்துவிட்டது. சண்டை எதுவும் இல்லாத காரணத்தினால் நிகழ்ச்சி சற்று சுமாராகவே சென்றது. ஆனால் போட்டியாளர்கள் குரூப் குரூப்பாக சேர்ந்துள்ளதால், தற்போது தான் மோதல்கள் கிளம்பியுள்ளது.
‘நேரம் காலை 9 மணி...’ என பிக்பாஸ் கூவதற்கு முன்பாகவே இமானும், ஐக்கியும் நாட்டு நடப்பு பேசுவதற்காக எழுந்துவிட்டனர். அப்புறம் அரசியல்’லாம் எப்படிபோது பிக்பாஸ் வீட்டுக்குள்ள என இமான் கேட்க, ஒவ்வொருவரும், ஸ்ட்ராட்டஜி வைத்து விளையாட ஆரம்பித்துவீட்டர்கள் என்றார் ஐக்கி.
சரி நீங்க பேசுனது போதும் என்று நினைத்தாரா என்னவோ தெரியவில்லை பிக்பாஸ், உடனே பாடலை போட்டுவிட்டு, அனைவரையும் எழுப்பிவிட்டார். ரவுடி பேபி பாடல் ஒலிக்க, அனைவரும் வழக்கம் போல் தங்களுக்குத் தெரிந்த நடனத்தை வெளிக்காட்டினர்.
ஒருமையில் பேசும் அபிஷேக்
பெரியவர்கள் என்று கூட பார்க்காமல், அபிஷேக் அனைவரையும் ஒருமையில் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதை பார்க்கும் நமக்கே சில சமயத்தில் சங்கடமாகத் தான் இருக்கிறது. அந்தவகையில் இசைவாணியிடம், வாடி, போடி என அபிஷேக் பேசிக் கொண்டிருந்தார்.
பிறகு ஒருவாரமாக நடைபெறும் ‘கதை சொல்லட்டுமா’ டாஸ்க் தொடங்குகிறது. இந்த முறை நம்ம கதை சொல்லும் மன்னர் அபிஷேக் வந்தார். இவர் பல திரைப்படங்களுக்கு விமர்சனம் சொல்லிச்சொல்லி தனது கதையை கூட விமர்சனம் போலவே சொல்கிறார். தனது அக்காவின் பாசத்தை ஒப்பிடும் போது, “என் அக்கா செருப்புன்னா நான் அதுல இருக்கும் சாணி, அவ டிஷ்யூ பேப்பர்னா நான் அதுல இருக்கும் அழுக்கு’’ என்று அவர் சொன்னதிலேயே நமக்கு தெரிந்திருக்கும்.
வாரி வழங்கும் குணாதிசயம் கொண்ட தனது தந்தைக்கு துரோகத்தால் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால் அவரும் தனது குடும்பம் சந்தித்த சிக்கல்கள், அந்த மன உளைச்சலால் அவர் எப்படி உயிரிழந்தார் என்பதை ஒரு சினிமா கதை விவரிப்பது போல் விவரித்தார் அபிஷேக். அந்த சூழ்நிலையில் தனது அப்பாவுடன் இல்லாமல் மனைவியுடன் தனியாக இருந்தது, இன்றுவரை எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என்றார்.
கன்ஃபெஷன் ரூமில் ஆப்பு
தலைவரான தாமரை செல்வியை அழைத்த பிக்பாஸ், ‘நீங்க யாரு... உங்களுக்கு என்ன கடமை இருக்கிறது. ஒரு தலைவராகச் செயல்பட வேண்டியதை நீங்கள் செய்யவில்லை’ என தனது பாணியில் அவரை கேள்வி கேட்கிறார். உடனே இனிமே நான் பார்த்துக்கிறேன் முதலாளி என அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார்.