போஜ்புரியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரிது சிங். இவர் தற்போது 'துலாரி பிடியா' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்கன்ச் நகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக வந்த ரிது சிங் சோன்பத்ராவில் படக்குழுவினர் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் இரவு 11 மணிக்கு ரிது சிங் இருக்கும் அறைக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். துப்பாக்கியை காட்டி மிரட்டி தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு மிரட்டியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை ரிது சிங் பயத்தில் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த அசோக் என்பவர் ரிது சிங்கை காப்பாற்ற முயன்றார். அப்போது, அந்த இளைஞர் அசோக்கை பார்த்து துப்பாக்கியால் சுட்டதில் அசோக் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து, ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.