தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'எஸ்.பி.பி. பாடலை ஒலிக்கவிட்டு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்!' - Bharathiraja calls public and the film fraternity for collective prayerfor sp balasubramaniam

எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து வர, தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடலை நாளை (ஆக. 20) மாலை ஆறு மணிக்கு ஒலிக்கவிட்டு, அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.

பாரதிராஜா எஸ்பிபி
பாரதிராஜா எஸ்பிபி

By

Published : Aug 19, 2020, 1:32 PM IST

Updated : Aug 19, 2020, 2:02 PM IST

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கடந்த 5ஆம் தேதி, கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இதனிடையே எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், விரைவில் பூரண குணம் பெற்று திரும்புவார் எனவும் அவரது மகன் எஸ்.பி. சரண் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாளை (ஆக. 20) மாலை ஆறு மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடலை ஒலிக்கவிட்டு இசை ரசிகர்கள் அனைவரும் அவருக்காகக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா அழைப்புவிடுத்துள்ளார்.

அதில், “இந்தியத் திரை உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தனது இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்தும், மொழிகளை வளமைப்படுத்திக் கொண்டும் ஒரு குயில் மூச்சுவிடாமல் இன்றும் நம்மைத் தாலாட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அது 'பாடும் நிலா' எஸ்.பி.பி. தான். தற்போது அவர் கரோனா தாக்குதலுக்கு ஆட்பட்டு முடக்கப்பட்டுள்ளார் என்று நினைக்கும்போது கண்ணீர் மல்குகிறது.

அவர் நிலையைக் கண்டு திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், அனைத்து துறைக் கலைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் வேதனை அடைவதைப் பார்த்து நெஞ்சம் பதறுகிறது. அன்பை மட்டுமே விதைக்கத் தெரிந்தவன், பண்பாளன், மாபெரும் கலைஞன். அந்தக் கலைஞன் மீண்டு வர வேண்டும். நாம் மீட்டு வர வேண்டும்.

அதற்காக இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான், அனைத்து திரைப்பட நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், பெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடகக் கலைஞர்கள், உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை (ஆக. 20) இந்திய நேரப்படி மாலை ஆறு மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன்.

பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்தபோது, இந்த மாதிரி ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். அவர் அதிலிருந்து மீண்டு தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்துவைத்தார். அதேபோல் இந்தக் கூட்டுப் பிரார்த்தனை மூலம் குரலில் பொன்மனச் செம்மலான எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம் வாருங்கள்.

இனம், மொழி, மதம் கடந்து ஒரு மகா கலைஞனை மீட்டெடுப்போம். அவன் குரல் காற்றில் மீண்டும் ஒலிக்க வேண்டும். ஒன்று கூடுவோம். பிரார்த்திப்போம்” என அழைப்புவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க :இதயங்களை கூப்பி கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்: இயக்குநர் பார்த்திபன்

Last Updated : Aug 19, 2020, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details